சமகால கிரிக்கெட்டில் பாபர் அசாம் நல்ல பேட்டிங் டெக்னிக்கை கொண்ட சிறந்த வீரராக திகழ்கிறார். பாபர் அசாம் விராட் கோலியுடன் ஒப்பிடுப்படுவதும் உண்டு. இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதமடித்து அசத்தினார் பாபர் அசாம். பாபர் அசம் 115 ரன்களை குவிக்க, பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இது பாபர் அசாமின் 11வது ஒருநாள் சதம். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவில் 11 சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்குத்தள்ளி பாபர் அசாம் மூன்றாமிடம் பிடித்துள்ளார். தனது 71வது ஒருநாள் இன்னிங்ஸில் பாபர் அசாம் 11வது சதத்தை அடித்துள்ளார். விராட் கோலி 82வது இன்னிங்ஸில்தான் 11வது சதத்தை அடித்தார். இந்த பட்டியலில் முதலிடத்தில் ஹாசிம் ஆம்லாவும்(64 இன்னிங்ஸ்களில் 11 சதங்கள்), இரண்டாமிடத்தில் குயிண்டன் டி காக்கும்(65 இன்னிங்ஸ்கள்) உள்ளனர். 

விராட் கோலி முதல் 11 சதங்கள் அடித்தது வேண்டுமானால் தாமதமாக இருக்கலாம். ஆனால் அதற்கடுத்த 148 இன்னிங்ஸ்களில் 32 சதத்தை விளாசியுள்ளார். விராட் கோலி மொத்தமாக 230 ஒருநாள் இன்னிங்ஸ்களில் ஆடி 43 சதங்களை விளாசியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதிக ஒருநாள் சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார். விராட் கோலியை, விரைவான 11வது சதம், 15வது சதம் என்று வேண்டுமானால் முந்தலாம். ஆனால் மொத்தமாக அவரது சத சாதனையை முறியடிக்க வேண்டுமெனில், தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி சதங்களை விளாசிக்கொண்டே இருக்க வேண்டும்.