வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் நடந்துவருகிறது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரண்டு அணிகளுக்குமே இது முதல் போட்டி என்பதால் இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் ஆடிவருகின்றன.

இந்த போட்டியில் இந்திய அணியில் ரோஹித் - ஹனுமா விஹாரி ஆகிய இருவரில் யார் இறக்கப்படுவார் என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. கங்குலி, சேவாக், அக்தர் ஆகியோர் ரோஹித்தைத்தான் சேர்க்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தனர். 

ஆனால் ரோஹித் சர்மாவிற்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. ஹனுமா விஹாரி தான் அணியில் எடுக்கப்பட்டிருந்தார். அதேபோல அஷ்வின் - குல்தீப் இருவரில் யார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ரோஹித்தும் அஷ்வினும் தான் எடுக்கப்பட வேண்டும் என்று சேவாக் தெரிவித்திருந்தார். 

ரோஹித் மாதிரியான ஒரு வீரரை அணியில் எடுத்துவிட்டு ஆடும் லெவனில் எடுக்காமல் இருப்பது முட்டாள்தனம். எனவே அவரை கண்டிப்பாக சேர்க்க வேண்டுமென்று, இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே அக்தர் தெரிவித்திருந்தார். ஆனால் ரோஹித் சேர்க்கப்படவில்லை. ரோஹித்தின் புறக்கணிப்பு பல முன்னாள் வீரர்களுக்கு அதிருப்தியையும் கடுப்பையுமே ஏற்படுத்தியது. 

அந்த வகையில் ரோஹித் புறக்கணிக்கப்பட்டது குறித்து பேசியுள்ள முன்னாள் கேப்டன் அசாருதீன், ஹனுமா விஹாரிக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ரோஹித் மாதிரியான ஒரு வீரரை அணியில் எடுக்கும்போது அவருக்கு கண்டிப்பாக ஆடும் லெவனில் வாய்ப்பளிக்க வேண்டும். என்னை பொறுத்தவரை அவரது ரெக்கார்டு ஒன்றும் அவ்வளவு மோசமில்லை. ரோஹித் ஒரு சிறந்த வீரர், ஒருநாள் கிரிக்கெட்டில் அபாரமாக ஆடிவருகிறார். எனவே டெஸ்ட் அணியில் ஆட அவர் தகுதியானவர் என்று அசாருதீன் தெரிவித்தார். 

சொல்லப்போனால், ரோஹித் சர்மா தொடக்க வீரராகவே களமிறங்கலாம். ராகுலுக்கு நிறைய வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஆஸ்திரேலியாவில் அவர் சரியாக ஆடவில்லை என்று அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட போதிலும், அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. அதனால் ரோஹித் சர்மா மாதிரியான ஒரு பெரிய வீரரை அணியில் எடுத்தால் அவரை ஆடவைத்து, அவருக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று அசாருதீன் தெரிவித்துள்ளார்.