Asianet News TamilAsianet News Tamil

பாகிஸ்தான் கேப்டன் அசார் அலியின் அபார சதத்தால் அணியின் மானம் தப்பியது..! முகமது ரிஸ்வான் அரைசதம்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் கேப்டன் அசார் அலியும் முகமது ரிஸ்வானும் இணைந்து பாகிஸ்தான் அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
 

azhar ali hits century in last test against england
Author
Southampton, First Published Aug 23, 2020, 10:26 PM IST

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே சவுத்தாம்ப்டனில் நடந்துவரும் கடைசி டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 583 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. ஜாக்  க்ராவ்லியின் இரட்டை சதம்(267), ஜோஸ் பட்லரின் சதத்தால்(152) தான் இங்கிலாந்து அணி 583 ரன்களை குவித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் இருவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேற, நட்சத்திர வீரர் பாபர் அசாமும் 11 ரன்களில் அவுட்டாக, பாகிஸ்தான் அணி 24 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்தது. 2ம் நாள் ஆட்ட முடிவில் அசார் அலியும் ஆசாத் ஷாஃபிக்கும் களத்தில் நின்றனர். 3ம் நாளான இன்றைய ஆட்டத்தை அவர்கள் இருவரும் தொடர்ந்தனர்.

களத்திற்கு வந்த மாத்திரத்திலேயே ஐந்து ரன்களில் ஆசாத் ஷாஃபிக்கும், 23 ரன்களில் ஃபவாத் ஆலமும் ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் கேப்டன் அசார் அலி நிலைத்து நின்று ஆடினார். 75 ரன்களுக்கே பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் கேப்டன் அசார் அலியுடன் ஜோடி சேர்ந்த முகமது ரிஸ்வான், அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினார். 

ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஆர்ச்சர் ஆகியோரின் ஃபாஸ்ட் பவுலிங்கை திறம்பட எதிர்கொண்டு ஆடிய அசார் அலி, சதமடித்தார். அசார் அலி கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு பின்னர், சரியாக ஆடாமல் இருந்த நிலையில், முதல் 2 போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் விமர்சனங்களை எதிர்கொண்டார். இந்நிலையில், இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 75 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து திணறிய நிலையில், முக்கியமான போட்டியின் முக்கியமான கட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்தார்.

அவருடன் இணைந்து சிறப்பாக ஆடிய ரிஸ்வான் அரைசதம் அடித்தார். ஆனால் அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் 53 ரன்களுக்கே ஆட்டமிழந்தார். 6வது விக்கெட்டுக்கு அசார் அலியும் ரிஸ்வானும் இணைந்து 138 ரன்களை சேர்த்தனர். இதையடுத்து அசார் அலியுடன் யாசிர் ஷா ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios