இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் இன்று தொடங்கியது. 

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து ஆடிவருகிறது. பாகிஸ்தான் அணியில் ஷதாப் கான் நீக்கப்பட்டு ஃபவாத் ஆலம் 11 ஆண்டுக்கு பிறகு சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் நீக்கப்பட்டு, ஜாக் கிராவ்லி மற்றும் சாம் கரன் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு சரியாக போட்டி தொடங்கியது. பாகிஸ்தான் அணியின் அபித் அலி மற்றும் ஷான் மசூத் ஆகிய இருவரும் களத்திற்கு வந்தனர். கடந்த போட்டியில் ஒரேயொரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்திய ஆண்டர்சன், இந்த போட்டியில் தான் யார் என்பதை நிரூபிக்கும் முனைப்பில் களமிறங்கினார். 

இன்னிங்ஸின் மூன்றாவது ஓவரை தனது 2வது ஓவராக வீசிய ஆண்டர்சன், அந்த ஓவரில் ஷான் மசூத்தை வீழ்த்தினார். கடந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதமடித்து, ஹாட்ரிக் சதமடித்த தொடக்க வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்து சாதனை படைத்த ஷான் மசூத், அந்த போடிட்யின் 2வது இன்னிங்ஸில் டக் அவுட்டான நிலையில், இம்முறை ஒரே ரன்னில் வெளியேறினார். 

மூன்றாவது ஓவரிலேயே, அணியின் ஸ்கோர் வெறும் 6 ரன்களாக இருந்தபோதே முதல் விக்கெட்டை இழந்துவிட்ட பாகிஸ்தான் அணியை அதன்பின்னர், கேப்டன் அசார் அலியும் மற்றொரு தொடக்க வீரரான அபித் அலியும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றினர். 3வதுஓவரிலேயே முதல் விக்கெட்டை வீழ்த்திய இங்கிலாந்து பவுலர்களால், அடுத்த விக்கெட்டை லன்ச் பிரேக் வரை வீழ்த்த முடியவில்லை. 

ஆண்டர்சன், பிராட், கிறிஸ் வோக்ஸ், சாம் கரன் ஆகியோரின் பவுலிங்கை திறம்பட எதிர்கொண்டு ஆடிய அசார் அலியும் அபித் அலியும் உணவு இடைவேளை வரை விக்கெட்டை விட்டுக்கொடுக்கவில்லை. முதல் நாளான இன்றைய ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் அடித்துள்ளது. அபித் அலி 33 ரன்களுடனும், கேப்டன் அசார் அலி 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.