கிரிக்கெட் உலகில் புகழ்பெற்ற ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக கோப்பையை வென்ற உத்வேகத்திலும் உற்சாகத்திலும் இங்கிலாந்து அணி, ஆஷஸ் தொடரை எதிர்கொள்ளவுள்ளது. அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணியும் வார்னர் மற்றும் ஸ்மித்தின் வருகையால் வலுப்பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணி உலக கோப்பையை விட முக்கியமான தொடராக கருதுவது ஆஷஸ் தொடரைத்தான். இரு அணிகளுக்குமே ஆஷஸ் தொடர் என்பது ஈகோ பிரச்னை. இரு அணிகளுக்குமே இது முக்கியமான தொடர் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் ஆஷஸ் தொடர் தொடங்கவுள்ளது. ஆஷஸ் தொடர் தொடங்க இன்னும் 5 நாட்கள் உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் மற்றும் வார்னருடன் தடை செய்யப்பட்ட பான்கிராஃப்ட்டுக்கு மீண்டும் அணியில் இடம் கிடைத்துள்ளது. 

உலக கோப்பையில் அசத்தலாக ஆடிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரிக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. கேப்டன் டிம் பெய்னே விக்கெட் கீப்பர் தான் என்றபோதிலும் உள்நாட்டு போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக ஆடிவந்த மேத்யூ வேடுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஹேண்ட்ஸ்கம்ப்பிற்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி:

டிம் பெய்ன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), பான்கிராஃப்ட், வார்னர், ஸ்மித், மார்கஸ் ஹாரிஸ், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்கஸ் லாபஸ்சாக்னே, மிட்செல் மார்ஷ், மேத்யூ வேட், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், நாதன் லயன், பாட்டின்சன், பீட்டர் சிடில், மைக்கேல் நேசெர்.