ஆஷஸ் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லார்ட்ஸில் நடந்த இரண்டாவது போட்டி மழை குறுக்கீட்டால் டிராவில் முடிந்தது. 

லீட்ஸில் நடந்த மூன்றாவது போட்டியில் ஸ்டோக்ஸின் அபாரமான பேட்டிங்கால் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. முதல் போட்டியில் எப்படி ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு ஸ்மித் காரணமாக திகழ்ந்தாரோ, அதேபோல மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு ஸ்டோக்ஸ் தான் முழு காரணம். 

இங்கிலாந்து அணியிடம் ஒரேயொரு விக்கெட் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், வெற்றிக்கு 73 ரன்கள் தேவைப்பட்டது. அதில் ஒரு ரன்னை தவிர மற்ற அனைத்து ரன்களையும் தனி ஒருவனாக அடித்து அணியை வெற்றி பெற செய்தார் ஸ்டோக்ஸ். இங்கிலாந்து அணியை வீழ்த்த வேண்டுமானால், ஆஸ்திரேலிய அணி ஸ்டோக்ஸை ஜொலிக்க விடக்கூடாது. 

ஆஷஸ் தொடரில் இன்னும் 2 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், ஸ்டோக்ஸை வீழ்த்துவதற்கான ஆயுதம் யார் என்று ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய டிம் பெய்ன், ஸ்டோக்ஸை வீழ்த்துவதற்கான ஆயுதம் நாதன் லயன் தான். கடந்த இரண்டு போட்டிகளில் நாதன் லயனின் பந்தில் ஸ்டோக்ஸ் கொடுத்த கேட்ச்சை சரியாக பிடித்திருந்தாலோ அல்லது எல்பிடபிள்யூவிற்கு ரிவியூவை சரியாக பயன்படுத்தியிருந்தாலோ, ஸ்டோக்ஸ் 5 - 6 முறை அவுட்டாகியிருப்பார். எனவே நாதன் லயன் தான் ஸ்டோக்ஸுக்கு எதிரான ஆயுதம் என்று டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.