ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 2-0 என வென்றது. 

முதல் டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணி, அடிலெய்டில் பகலிரவு போட்டியாக நடந்த இரண்டாவது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை வென்றது. இந்த தொடரில் 120 புள்ளிகளை பெற்ற ஆஸ்திரேலிய அணி, மொத்தமாக 176 புள்ளிகளுடன் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 

அடிலெய்டில் பகலிரவு போட்டியாக நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, வார்னரின் முச்சதம் மற்றும் லபுஷேனின் சதம் ஆகியவற்றால் 589 ரன்களை குவித்தது. வெறும் 3 விக்கெட் இழப்பிற்கு 589 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலிய அணி. வார்னர், ஜோ பர்ன்ஸ், லபுஷேன், ஸ்மித், மேத்யூ வேட் ஆகிய ஐவர் மட்டுமே பேட்டிங் ஆடினர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 302 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, ஃபாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 239 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இன்னிங்ஸ் மற்றும் 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டிற்கு, அணிக்கு எந்த விதத்திலும் பங்களிப்பு செய்யும் வாய்ப்பே கிடைக்கவில்லை. பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைக்காத டிராவிஸ் ஹெட், பவுலிங்கும் வீசவில்லை. ஃபீல்டிங்கில் கூட ஒரு கேட்ச் கூட அவரிடம் வராததால் கேட்ச், ரன் அவுட் என ஃபீல்டிங்கிலும் எந்தவிதமான பங்களிப்பும் செய்யவில்லை. ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்த போட்டியில் டிராவிஸ் ஹெட் எந்த விதத்திலும் அணிக்கு பங்களிப்பு செய்யமுடியாமல் போனது.