உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகள் ஆடிவருகின்றன.

நாட்டிங்காமில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து வார்னரும் ஃபின்ச்சும் களமிறங்கினர். 

வார்னர் - ஃபின்ச் இருவருமே நல்ல ஃபார்மில் இருக்கும் நிலையில், வங்கதேச அணியின் பவுலிங்கை ஆரம்பத்தில் சற்று நிதானமாக ஆடிய வார்னரும் ஃபின்ச்சும் பின்னர் தங்களது வேலையை காட்ட ஆரம்பித்தனர். முதல் சில ஓவர்கள் பொறுமையாக ஆடினர். களத்தில் நிலைத்துவிட்டதும் அதிரடியை தொடங்கினர். 

இருவரில் ஒருவர் அடித்தாலே எதிரணியின் நிலை பரிதாபமாகிவிடும். இந்த போட்டியிலோ இருவருமே அடித்து ஆடிவருகின்றனர். வார்னர் அரைசதம் அடிக்க, அவரை தொடர்ந்து ஃபின்ச்சும் அரைசதம் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களை கடந்து இருவரும் ஆடிவருகின்றனர். 

வங்கதேச அணியால் முதல் விக்கெட்டையே வீழ்த்த முடியவில்லை. இருவரும் களத்தில் நிலைத்து நின்றுவிட்டது மட்டுமல்லாமல் அதிரடியாகவும் ஆடிவருவதால், ஆஸ்திரேலிய அணி இமாலய ஸ்கோரை எட்டுவது உறுதியாகிவிட்டது.