இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகலிரவு போட்டியாக நடக்கிறது. நேற்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது.

இந்திய அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா டக் அவுட்டான நிலையில், மயன்க் அகர்வால் 17 ரன்களுக்கும் புஜாரா 43 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அரைசதம் அடித்த கோலி 74 ரன்களுக்கு ரன் அவுட்டாகி சத வாய்ப்பை இழந்தார். ரஹானே 42 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஹனுமா விஹாரி பதினாறு ரன்களுக்கு நடையை கட்டினார். 89 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் அடித்திருந்தது இந்திய அணி. 

முதல் நாளான நேற்றைய ஆட்ட முடிவில் களத்தில் இருந்த அஷ்வினும் சஹாவும் இன்றைய ஆட்டத்தை தொடங்கினர். இன்று வெறும் நான்கரை ஓவர்களில் எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் வெறும் 11 ரன்களுக்கு இழந்த இந்திய அணி 244 ரன்களுக்கு சுருண்டது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக மேத்யூ வேட் மற்றும் ஜோ பர்ன்ஸ் ஆகிய இருவரும் களமிறங்கினர். தலா 7 ஓவர்களுக்கு மேல் பேட்டிங் ஆடியிருந்த மேத்யூ வேட் மற்றும் பர்ன்ஸ் ஆகிய இருவரையும் தலா 8 ரன்களுக்கு தனது அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தினார் பும்ரா.

விக்கெட் வேட்டையை பும்ரா தொடங்கிவைக்க, அதை அஷ்வின் தொடர்ந்தார். ஸ்மித்தும் லபுஷேனும் ஜோடி சேர்ந்து ஆடிய நிலையில், ஸ்மித்தை வெறும் ஒரு ரன்னுக்கு வீழ்த்தி பெவிலியனுக்கு அனுப்பிய அஷ்வின், டிராவிஸ் ஹெட்டை 7 ரன்களுக்கு வீழ்த்தினார். கேமரூன் க்ரீனையும் 11 ரன்களுக்கு அஷ்வின் வீழ்த்த,  79 ரன்களுக்கே ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அனுபவம் வாய்ந்த ஸ்பின்னரான அஷ்வின், அனுபவம் என்றால் என்னவென்று ஆஸ்திரேலியாவில் காட்டிக்கொண்டிருக்கிறார்.