இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸி., அணியும், 2வது டெஸ்ட்டில் இந்திய அணியும் வெற்றி பெற்ற நிலையில், 3வது டெஸ்ட் வரும் ஜனவரி 7ம் தேதி தொடங்குகிறது. அந்த போட்டிக்கான ஆஸி., அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் 2 போட்டிகளில் ஆடிராத அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர் 3வது போட்டிக்கான அணியில் இடம்பெற்றிருக்கிறார். முதல் 2 போட்டிகளிலும் பேட்டிங்கில் சொதப்பிய ஜோ பர்ன்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் இளம் தொடக்க வீரரான வில் புகோவ்ஸ்கியும் அணியில் இடம்பெற்றுள்ளார். எனவே வார்னரும் புகோவ்ஸ்கியும் அடுத்த போட்டியில் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள். இவர்கள் தொடக்க வீரர்களாக இறங்குவதால், தொடக்க வீரராக இறங்க கிடைத்த முதல் வாய்ப்பிலேயே சிறப்பாக ஆடிய மேத்யூ வேட் மீண்டும் டாப் ஆர்டரில் இறங்க வாய்ப்பில்லை.

வார்னரும் புகோவ்ஸ்கியும் அணியில் நுழைவதால், மேத்யூ வேட் அல்லது டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரில் ஒருவர் ஆடும் லெவனில் இடத்தை இழப்பார். பெரும்பாலும் அது டிராவிஸ் ஹெட்டாகத்தான் இருக்கும். ஏனெனில் மேத்யூ வேட் டாப் ஆர்டரில் நன்றாக ஆடியிருப்பதால், அவர் அணியிலிருந்து நீக்கப்படமாட்டார்; ஆனால் மிடில் ஆர்டரில் இறக்கப்படுவார்.

3வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸி., அணி:

டிம் பெய்ன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), சீன் அபாட், பாட் கம்மின்ஸ், கிறிஸ் க்ரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ், மார்னஸ் லபுஷேன், நேதன் லயன், மைக்கேல் நெசெர், ஜேம்ஸ் பாட்டின்சன், வில் புகோவ்ஸ்கி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், மேத்யூ வேட், டேவிட் வார்னர்.