நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் போட்டி இன்று சிட்னியில் நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 50 ஓவரில் 258 ரன்கள் அடித்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் ஃபின்ச்சும் வார்னரும் இணைந்து அவசரப்படாமல் சிறப்பாக ஆடி நல்ல தொடக்கத்தை  அமைத்து கொடுத்தனர். சிறப்பாக ஆடிய இருவருமே அரைசதம் அடித்தனர். முதல் விக்கெட்டுக்கு தொடக்க வீரர்கள் இருவரும் இணைந்து 24 ஓவரில் 124 ரன்களை சேர்த்தனர். 

வார்னர் 67 ரன்களிலும் ஃபின்ச் 60 ரன்களிலும் ஆட்டமிழக்க, அவர்களை தொடர்ந்து களமிறங்கிய ஸ்மித் மற்றும் ஷார்ட் ஆகிய இருவரும் சரியாக ஆடாமல் முறையே 14 மற்றும் 5 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் லபுஷேனும் மிட்செல் மார்ஷும் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். மார்ஷ் 27 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த அலெக்ஸ் கேரி, இந்த முறையும் ஒரு ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சரியாக ஆடாத அலெக்ஸ் கேரி, இந்த முறையும் ஏமாற்றினார்.

Also Read - ஆர்சிபி வீரருக்கு கொரோனா டெஸ்ட்.. ரசிகர்கள் அதிர்ச்சி

ஆனால் வழக்கம்போலவே பொறுப்புடன் ஆடிய மார்னஸ் லபுஷேன், அரைசதம் அடித்தார். 56 ரன்கள் அடித்த லபுஷேன், இன்னிங்ஸின் கடைசி ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து 50 ஓவரில் 258 ரன்கள் அடித்தது ஆஸ்திரேலிய அணி. வார்னரும் ஃபின்ச்சும் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தும் கூட, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால், அந்த அணி பெரிய ஸ்கோரை அடிக்க முடியாமல் போனது. லபுஷேனின் பொறுப்பான அரைசதத்தால் அந்த அணி 258 ரன்கள் அடித்தது.

259 ரன்கள் என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி ஆடிவருகிறது.