இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான 2வது டி20 போட்டி சவுத்தாம்ப்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடி 20 ஓவரில் 157 ரன்கள் அடித்துள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே ஆர்ச்சரின் பவுலிங்கில் டக் அவுட்டானார். அதன்பின்னர் களத்திற்கு வந்த அலெக்ஸ் கேரி, அடுத்த ஓவரிலேயே மார்க் உட்டின் பந்தில் 2 ரன்னில் வெளியேறினார்.

அதன்பின்னர் ஸ்டீவ் ஸ்மித்தும் 10 ரன்களில் ரன் அவுட்டானார். இயன் மோர்கன் அருமையாக ஃபீல்டிங் செய்து அவசரப்படாமல், ஸ்டம்பிற்கு அருகே சென்று நேரடியாக ஸ்டம்பில் அடித்து ஸ்மித்தை ரன் அவுட் செய்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய மறுமுனையில் நிலைத்து ஆடிய கேப்டன் ஃபின்ச், 33 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 40 ரன்கள் அடித்து 12வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

ஸ்மித்தின் விக்கெட்டுக்கு பிறகு ஃபின்ச்சுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடிய மார்கஸ் ஸ்டோய்னிஸும் 35 ரன்னில் 13வது ஓவரில் ஆட்டமிழந்தார். ஃபின்ச் ஆட்டமிழந்த அடுத்த ஓவரிலேயே ஸ்டோய்னிஸும் ஆட்டமிழக்க, அதன்பின்னர் மேக்ஸ்வெல்லாலும் பெரியளவில் அடித்து ஆடி ஸ்கோர் செய்ய முடியவில்லை.

மேக்ஸ்வெல் 26 ரன்களும் அஷ்டன் அகர் 23 ரன்களும் கம்மின்ஸ் 13 ரன்களும் அடித்து, ஆஸ்திரேலிய அணியை 157 ரன்கள் என்ற ஸ்கோரை அடிக்க உதவினர். ஆர்ச்சர், மார்க் உட், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷீத், டாம் கரன் ஆகிய இங்கிலாந்து பவுலர்கள் அனைவருமே ஆஸ்திரேலிய அணியை எந்த இடத்திலும் ஆதிக்க செலுத்த விடாமல் கடைசி வரை கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஸ்கோரை கட்டுப்படுத்தினர்.
 
இதையடுத்து 158 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து அணி விரட்டிவருகிறது.