ஆஸ்திரேலிய அணியின் நான்கு விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே புடுங்கி எறிந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. 

உலக கோப்பை தொடரில் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஆடிவருகின்றன. நாட்டிங்காமில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர், ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய பணித்தார். 

ஆஸ்திரேலிய அணியின் அனுபவ மற்றும் அதிரடி தொடக்க வீரர்கள் டேவிட் வார்னரும் ஆரோன் ஃபின்ச்சும் களமிறங்கினர். ஃபின்ச்சை 6 ரன்களில் ஒஷேன் தாமஸ் வீழ்த்தினார். அதற்கு அடுத்த ஓவரிலேயே டேவிட் வார்னர் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டிய கட்டாயத்தில் ஸ்மித்தும் உஸ்மான் கவாஜாவும் இருந்தனர். 

இருவரும் மெது மெதுவாக பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்ற நிலையில், உஸ்மான் கவாஜாவை ஆண்ட்ரே ரசல் வீழ்த்தினார். அதற்கு அடுத்த ஓவரிலேயே மேக்ஸ்வெல்லை ரன் ஏதும் எடுக்கவிடாமல் கோட்ரெல் வீழ்த்தினார். 38 ரன்களுக்கே ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

ஸ்மித்தும் மார்கஸ் ஸ்டோய்னிஸும் இணைந்து ஆடிவருகின்றனர். இவர்கள் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டும். இல்லையென்றால் ஆஸ்திரேலிய அணியின் நிலை பரிதாபமாகிவிடும்.