நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட். மெல்போர்னில் நடந்துவரும் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு அருகில் உள்ளது. 

கடந்த 26ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, டிராவிஸ் ஹெட்டின் அபார சதம், ஸ்மித் - லபுஷேன் - டிம் பெய்ன் ஆகியோரின் பொறுப்பான அரைசதம் ஆகியவற்றின் விளைவாக, முதல் இன்னிங்ஸில் 467 ரன்களை குவித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணியில் யாருமே சரியாக பேட்டிங் ஆடவில்லை. அந்த அணியின் நட்சத்திர வீரர்களான வில்லியம்சன், டெய்லர், ஹென்ரி நிகோல்ஸ் ஆகிய அனைவருமே சொதப்பினர். டாம் லேதம் அடித்த அரைசதத்தால் அந்த அணி 148 ரன்கள் அடித்தது. இல்லையெனில் அதைக்கூட அடித்திருக்க முடியாது.

319 ரன்கள் முன்னிலை என்ற வலுவான நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து மொத்தமாக 487 ரன்கள் முன்னிலை பெற்று, 488 ரன்கள் என்ற கடின இலக்கை நியூசிலாந்துக்கு நிர்ணயித்தது. 

மிக மிக கடினமான இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள், ஜேம்ஸ் பாட்டின்சனின் வேகத்தை சமாளிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர். முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்த டாம் லேதம் 8 ரன்களிலும் கேப்டன் கேன் வில்லியம்சன் ரன்னே அடிக்காமலும் அவுட்டாக, டெய்லர் 2 ரன்னில் நடையை கட்டினார். இவர்கள் மூவருமே ஜேம்ஸ் பாட்டின்சனிடம் விக்கெட்டை பறிகொடுத்தனர். 

33 ரன்கள் அடித்த ஹென்ரி நிகோல்ஸை நாதன் லயன் வீழ்த்தினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார் தொடக்க வீரர் டாம் பிளண்டெல். நியூசிலாந்து அணி விரைவில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் டாம் பிளண்டெலுடன் வாட்லிங் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் அடித்துள்ளது. டாம் பிளண்டெல் 76 ரன்களுடனும் வாட்லிங் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

நியூசிலாந்து அணி இன்னும் 345 ரன்கள் பின் தங்கியுள்ள நிலையில், அதை அடிப்பது சாத்தியமே இல்லாத விஷயம். எனவே ஆஸ்திரேலிய அணியின் வெற்றி உறுதியாகிவிட்டது. ஏற்கனவே 216 புள்ளிகளுடன் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இரண்டாமிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி, இதில் வெற்றி பெற்றால் கூடுதலாக 40 புள்ளிகளை பெற்று 256 புள்ளிகளுடன் இரண்டாமித்தில் நீடிக்கும்.