இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான சிட்னி டெஸ்ட் டிராவில் முடிந்தது. 2வது இன்னிங்ஸில் 407 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டியது இந்திய அணி. இந்திய அணி 4ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட்டை இழந்திருந்த நிலையில், கடைசி நாள் ஆட்டத்தில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி பெற முடியும் என்ற நிலையில், வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே ஆஸி., அணி வீழ்த்தியது. ரிஷப் பண்ட், ஹனுமா விஹாரி, புஜாரா, அஷ்வின் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் போட்டி டிரா ஆனது.

குறிப்பாக ரிஷப் பண்ட் ஆடிய விதம் அபாரமானது. டிரா செய்ய ஆடாமல், வெற்றிக்காக ஆடிய ரிஷப் பண்ட், அடித்து ஆடி 118 பந்தில் 97 ரன்களை குவித்து 3 ரன்னில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். ஐந்தாம் நாள் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் பேட்டிங் ஆடியபோது டீ பிரேக் விடப்பட்டது. அந்த பிரேக்கிற்கு செல்லும் முன், ஸ்டீவ் ஸ்மித் க்ரீஸில் காலை தேய்த்து பேட்டிங் கார்ட் எடுப்பதுபோல செய்தார். ரிஷப் பண்ட்டின் பேட்டிங் கார்டைத்தான் ஸ்மித் நீக்கினார் என அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. கடும் விமர்சனத்துக்கு ஆளானார் ஸ்மித்.

இந்நிலையில், அந்த சம்பவம் குறித்து தெளிவுபடுத்தியுள்ள ஆஸி., கேப்டன் டிம் பெய்ன், ஸ்மித்தின் மீதான குற்றச்சாட்டு சிரிப்பைத்தான் வரவழைத்தது. சிட்னி பிட்ச் கான்க்ரீட்டை போன்றது. அதில் பேட்டிங் கார்ட் எடுக்க வேண்டுமென்றால் 15 இன்ச் ஸ்பைக் தேவை. அப்படியிருக்கையில் பண்ட்டின் கார்டை ஸ்மித் அழித்தார் என குற்றம்சாட்டுகின்றனர். அதைக்கேட்டு நாங்கள் சிரிக்கத்தான் செய்தோம். ஸ்மித் அங்கு நின்று அவரது பேட்டிங் குறித்து சிந்தித்துக்கொண்டிருந்தார். அவர் இந்த விஷயத்தில் 100 சதவிகிதம் இன்னசெண்ட். என் வாழ்வில் நான் பார்த்ததிலேயே மிகவும் மோசமான, குப்பையான விஷயம் இதுதான்.

ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடும்போது ஒரு நாளில் குறைந்து ஐந்து அல்லது ஆறு முறை க்ரீஸில் நின்று பார்ப்பார். அது அவரது வழக்கமான செயல் என்று டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.