Asianet News TamilAsianet News Tamil

வார்னர் - மிட்செல் மார்ஷ் அதிரடி அரைசதம்..! வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அரையிறுதியில் ஒரு அடி வைத்த ஆஸ்திரேலியா

டி20 உலக கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேற வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, அரையிறுதியில் ஒரு அடியை எடுத்து வைத்துவிட்டது.
 

australia beat west indies in a must win game and put one step in semi final of t20 world cup
Author
Abu Dhabi - United Arab Emirates, First Published Nov 6, 2021, 7:04 PM IST

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. க்ரூப் 1-ல் இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பெற்று அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், 2வது அணியாக அரையிறுதிக்கு முன்னேற ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தலா 4 போட்டிகளில் ஆடி தலா 6 புள்ளிகளை பெற்றிருந்த ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 2 அணிகளுக்கும் கடைசி போட்டி இன்றுதான். தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து இடையேயான போட்டி இரவு நடக்கிறது.

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான போட்டி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடந்தது. இந்த போட்டியில் வெற்றி கட்டாயத்தில் வெஸ்ட் இண்டீஸை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய அணி, டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

வெஸ்ட் இண்டீஸ் அணி:

கிறிஸ் கெய்ல், எவின் லூயிஸ், நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ரோஸ்டான் சேஸ், ஷிம்ரான் ஹெட்மயர், கைரன் பொல்லார்டு (கேப்டன்), ஆண்ட்ரே ரசல், ஜேசன் ஹோல்டர், ட்வைன் பிராவோ, ஹைடன் வால்ஷ், அகீல் ஹுசைன்.

முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல், 15 ரன்னில் பாட் கம்மின்ஸின் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் பூரன்(4), ரோஸ்டான் சேஸ்(0) ஆகிய இருவரும் ஹேசில்வுட்டின் ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர்.

நம்பிக்கையளித்த ஹெட்மயரும் 27 ரன்னில் ஹேசில்வுட்டின் பந்தில் ஆட்டமிழக்க, சர்வதேச கிரிக்கெட்டில் தனது கடைசி இன்னிங்ஸை இன்று ஆடிய  பிராவோ 10 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் சவாலான இலக்கை ஆஸ்திரேலியாவிற்கு நிர்ணயிக்க வேண்டும் என்பதற்காக பொறுப்புடன் அடித்து ஆடிய கேப்டன் பொல்லார்டு, 31 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 44 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரின் 2வது பந்தில் பொல்லார்டு ஆட்டமிழக்க, மிட்செல் ஸ்டார்க் வீசிய அந்த ஓவரின் முதல் 4 பந்துகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெறும் 2 ரன்கள் மட்டுமே கிடைக்க, கடைசி 2 பந்தில் 2 சிக்ஸர்களை விளாசி தனது ஸ்டைலில் முடித்து கொடுத்தார் ஆண்ட்ரே ரசல். இதையடுத்து 20 ஓவரில் 157 ரன்களை குவித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.

158 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் வார்னர் தனது அதிரடியான பேட்டிங்கால் இந்த இலக்கை எளிதாக்கினார். தொடக்க வீரர் ஆரோன் ஃபின்ச் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான டேவிட் வார்னர் தனது வழக்கமான அதிரடி பேட்டிங்கை ஆடினார். டி20 உலக கோப்பையின் முதல் பாதியில் ஃபார்மில் இல்லாமல் தவித்துவந்த வார்னர், கடந்த போட்டியில் நன்றாக ஆடி ஃபார்முக்கு திரும்பிய நிலையில், அதே ஃபார்மை இந்த போட்டியில் தொடர்ந்தார்.

தனது இயல்பான அதிரடி பேட்டிங்கை ஆடிய வார்னர், பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து நொறுக்கினார். 2வது விக்கெட்டுக்கு அவருடன் ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஷும் வார்னருக்கு ஒத்துழைப்பு கொடுத்து அடித்து ஆடினார். வார்னர் அரைசதம் அடிக்க, அவரைத்தொடர்ந்து மிட்செல் மார்ஷும் அரைசதம் அடித்தார். ஆனால் மிட்செல் மார்ஷ் 32 பந்தில் 53 ரன்கள் அடித்து வெற்றி பெறப்போகும் நேரத்தில் ஆட்டமிழந்தார்.

ஆனால் வார்னர் கடைசிவரை களத்தில் நின்று 56 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 89 ரன்களை குவித்து 17வது ஓவரிலேயே ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற செய்தார். வார்னரின் அதிரடியால் 17வது ஓவரிலேயே, அதுவும் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 8 புள்ளிகளை பெற்றதுடன், நல்ல நெட் ரன்ரேட்டையும் பெற்றதால், அரையிறுதியில் ஒரு அடியை எடுத்து வைத்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

ஏனெனில் தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தை ஜெயித்தால் மட்டும் போதாது. மிகப்பெரிய வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பெற்றால் தான் ஆஸ்திரேலியாவின் நெட் ரன்ரேட்டை விட அதிகம் பெற்று அரையிறுதிக்கு முன்னேற முடியும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios