இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியிலும் வெற்றி பெற்று 3-0 என டி20 தொடரை வென்றது ஆஸ்திரேலிய அணி. 

இலங்கை அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் 2 டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், 3வது போட்டி இன்று நடந்தது.

கான்பெராவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியில் கேப்டன் ஷனாகா பொறுப்புடன் பேட்டிங் ஆடி அதிகபட்சமாக 39 ரன்கள் அடித்தார். தினேஷ் சண்டிமால் 25 ரன்களும், தொடக்க வீரர் பதும் நிசாங்கா 16 ரன்களும் அடித்தனர். மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேற, 20 ஓவரில் இலங்கை அணி வெறும் 121 ரன்கள் மட்டுமே அடித்தது.

122 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியில் க்ளென் மேக்ஸ்வெல் 39 ரன்களும், கேப்டன் ஆரோன் ஃபின்ச் 35 ரன்களும் அடித்தனர். ஜோஷ் இங்லிஸும் (21*) மார்கஸ் ஸ்டோய்னிஸும(12*) 17வது ஓவரில் போட்டியை முடித்தனர். 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, 3-0 என டி20 தொடரை வென்றது.