ஆஸ்திரேலியா - இலங்கை இடையேயான 2வது டி20 போட்டி டையில் முடிந்த நிலையில், சூப்பர் ஓவரில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
இலங்கை அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது டி20 போட்டி இன்று நடந்தது.
சிட்னியில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20ஓவரில் 164 ரன்கள் அடித்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஜோஷ் இங்லிஸ் 48 ரன்கள் அடித்தார். ஆரோன் ஃபின்ச் 25 ரன்கள் அடித்தார். ஸ்மித், மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ் ஆகியோர் சிறு சிறு பங்களிப்பு செய்ய, 20 ஓவரில் 164 ரன்கள் அடித்தது ஆஸ்திரேலிய அணி.
165 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இலங்கை அணியில் தொடக்க வீரர் பதும் நிசாங்கா ஒருமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடிக்க, மறுமுனையில் மற்ற வீரர்கள் அனைவரும் சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் நிசாங்கா கடைசி ஓவர் வரை களத்தில் இருந்தார்.
கடைசி ஓவரில் இலங்கை அணியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்தில் (வைடுக்கு பிறகு ரீபால்) பவுண்டரி அடித்த நிசாங்கா, 2வது பந்தில் 2 ரன்கள் அடித்துவிட்டு, 3வது பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி 3 பந்தில் 12 ரன்கள் தேவைப்பட, 4வது பந்தில் சிக்ஸர் அடித்துவிட்டு 5வது பந்தில் சிங்கிள் எடுத்தார் தீக்ஷனா. கடைசி பந்தில் துஷ்மந்தா சமீரா பவுண்டரி அடிக்க, ஆட்டம் டை ஆனது.
சூப்பர் ஒவரில் இலங்கை அணி 5 ரன்கள் மட்டுமே அடிக்க, 3 பந்தில் இலக்கை எட்டி சூப்பர் ஓவரில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
