இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலிய அணி டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர் ஆகிய இரண்டு தொடர்களையும் வென்று அசத்தியது.

ஸ்மித்தும் வார்னரும் இல்லாமல் கடந்த ஓராண்டாக திணறிவந்த ஆஸ்திரேலிய அணிக்கு, உலக கோப்பைக்கு முன்னதாக இந்தியாவுக்கு எதிரான வெற்றி மிகுந்த உத்வேகமாக அமைந்தது. இந்தியாவில் தொடரை வென்ற கையோடு ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடிவருகிறது ஆஸ்திரேலிய அணி. 

முதல் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் இமாம் உல் ஹக் 17 ரன்களும் ஷான் மசூத் 40 ரன்களும் அடித்தனர். மூன்றாவது விக்கெட்டுக்கு ஹரீஸ் சோஹைலும் உமர் அக்மலும் இணைந்து சிறப்பாக ஆடினர். மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 98 ரன்களை சேர்த்தது. உமர் அக்மல் 48 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பிறகும் தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஹரீஸ் சொஹைல் சதமடித்து அசத்தினார். 50 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 280 ரன்களை அடித்தது. 101 ரன்கள் அடித்து சொஹைல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

281 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 24 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும் மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான ஃபின்ச்சும் ஷான் மார்ஷும் இணைந்து அபாரமாக ஆடினர். இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி  172 ரன்களை குவித்தது. அபாரமாக ஆடி சதமடித்த ஃபின்ச், 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் 49வது ஓவரில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. ஷான் மார்ஷ் 91 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக ஆடிய ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், 30 ரன்கள் எடுத்து ஷான் மார்ஷுக்கு உதவிகரமாக இருந்தார். அவரும் கடைசிவரை ஆட்டமிழக்கவில்லை. தொடக்க வீரர்களின் விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ஆரோன் ஃபின்ச் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.