உலக கோப்பை 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்னதாக நடந்துவரும் பயிற்சி போட்டியில் அனைத்து அணிகளும் ஆடிவருகின்றன. 

நேற்று நடந்த ஒரு போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின், தொடக்க வீரரும் கேப்டனுமான ஆரோன் ஃபின்ச் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் வார்னர் 43 ரன்கள் அடித்தார். அரைசதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். 

ஷான் மார்ஷ் 30 ரன்களில் அவுட்டானார். உஸ்மான் கவாஜா, மார்கஸ் ஸ்டோய்னிஸ் என அவரவர் தன் பங்கிற்கு சிறிய பங்களிப்பு செய்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். ஆனால் மறுமுனையில் நிதானமாகவும் அதேநேரத்தில் அதிரடியாகவும் ஆடிய ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து அசத்தினார். 102 பந்துகளில் 116 ரன்களை குவித்த ஸ்மித், கடைசி ஓவரின் 5வது பந்தில் ஆட்டமிழந்தார். ஸ்மித்தின் பொறுப்பான பேட்டிங்கால் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 297 ரன்களை குவித்தது. 

298 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் பேர்ஸ்டோ 12 ரன்களிலும் ஜேசன் ராய் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஜேம்ஸ் வின்ஸ் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். பென் ஸ்டோக்ஸ் 20 ரன்களில் ஆட்டமிழக்க, வின்ஸுடன் பட்லர் ஜோடி சேர்ந்தார். பட்லர் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த பட்லர் 31 பந்துகளில் 54 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். பட்லர் போன வேகத்திற்கு வெற்றி எளிதாக இங்கிலாந்து வசப்பட்டிருக்கும்.

ஆனால் பட்லரை குல்ட்டர்நைல் வீழ்த்தி பிரேக் கொடுத்தார். பட்லரை அடுத்து அரைசதம் அடித்த ஜேம்ஸ் வின்ஸும் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் பொறுப்பை கையில் எடுத்த கிறிஸ் வோக்ஸ் ஒருமுனையில் சிறப்பாக ஆட, மறுமுனையில் மொயின் அலி, பிளெங்கெட் ஆகியோர் ஆட்டமிழக்க, பின்னர் வோக்ஸும் 40 ரன்களில் ஆட்டமிழந்துவிட்டார். கடைசி ஓவரின் 3வது பந்தில் இங்கிலாந்து அணி 285 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 

இதற்கு முன் அண்மையில் இங்கிலாந்து ஆடிய கடைசி போட்டிவரை, அந்த அணி அசால்ட்டாக 350 ரன்களை கடந்துவந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி 300க்கும் குறைவான ஸ்கோர் அடித்து அதை எடுக்கவிடாமல் இங்கிலாந்தை தடுத்துள்ளது. இந்த உலக கோப்பையை இங்கிலாந்துதான் வெல்லும் என்றும் இங்கிலாந்தை பற்றி அனைவரும் தாறுமாறாக புகழ்ந்துவரும் நிலையில், இங்கிலாந்தையும் அதிக ஸ்கோர் அடிக்கவிடாமல் கட்டுப்படுத்த முடியும் என ஆஸ்திரேலிய அணி காட்டியுள்ளது. தடை முடிந்து திரும்பி அணிக்கு வந்துள்ள ஸ்மித்திற்கு இந்த சதம் அபாரமானது.