இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால் 1-1 என தொடர் சமனில் இருந்தது.

தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று மான்செஸ்டரில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 302 ரன்களை குவித்தது.

இங்கிலாந்து அணி தொடக்க வீரர் ஜேசன் ராய் மற்றும் ஜோ ரூட் ஆகிய இருவரின் விக்கெட்டையும் இன்னிங்ஸின் முதல் 2 பந்தில் இழந்தது. ராய் மற்றும் ரூட் ஆகிய இருவரையும் கோல்டன் டக் அவுட்டாக்கி அனுப்பினார் மிட்செல் ஸ்டார்க்.

அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரரான ஜானி பேர்ஸ்டோவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் மோர்கனும் 23 ரன்களில் ஆடம் ஸாம்பாவின் சுழலில் வீழ்ந்தார். அவரைத்தொடர்ந்து ஜோஸ் பட்லரும் 8 ரன்களில் ஸாம்பாவின் சுழலில் அவுட்டாக, இங்கிலாந்து அணி 18.1 ஓவரில் 96 ரன்களுக்கே முக்கியமான 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய ஜானி பேர்ஸ்டோவுடன் சாம் பில்லிங்ஸ் ஜோடி சேர்ந்தார். பேர்ஸ்டோவும் பில்லிங்ஸும் இணைந்து அடித்து ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக ஆடிய பேர்ஸ்டோ சதமடிக்க, அவரை தொடர்ந்து பில்லிங்ஸ் அரைசதம் அடித்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 19 ஓவரில் 114 ரன்களை சேர்த்தனர். பில்லிங்ஸ் 58 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

களத்தில் நங்கூரமிட்டு சதமடித்த பேர்ஸ்டோவுடன் கிறிஸ் வோக்ஸ் ஜோடி சேர்ந்த மாத்திரத்தில் பேர்ஸ்டோ 112 ரன்களில் ஆட்டமிழந்தார். 126 பந்தில் 12 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 112 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் டாம் கரன் 19 ரன்களும் அடில் ரஷீத் 11 ரன்களும் அடித்து தங்கள் பங்களிப்பை வழங்கினர்.

பேர்ஸ்டோ ஆட்டமிழந்ததும், அணியின் ஸ்கோரை உயர்த்த வேண்டிய பொறுப்பை தனது தோள்களில் சுமந்த கிறிஸ் வோக்ஸ், அதிரடியாக ஆடி 39 பந்தில் 6 பவுண்டரிகளுடன் 53 ரன்களை விளாசி, இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 300ஐ கடக்க உதவினார். பேர்ஸ்டோ, பில்லிங்ஸ், வோக்ஸின் சிறப்பான மற்றும் பொறுப்பான பேட்டிங்கால் இங்கிலாந்து அணி 50 ஓவரில் 302 ரன்களை குவித்து 303 என்ற கடின இலக்கை ஆஸ்திரேலியாவிற்கு நிர்ணயித்தது.

303 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஃபின்ச் 12 ரன்களிலும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 4 ரன்களிலும் டேவிட் வார்னர் 24 ரன்களிலும் மிட்செல் மார்ஷ் 2 ரன்களிலும் மார்னஸ் லபுஷேன் 20 ரன்களிலும் என சீரான இடைவெளியில் ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அந்த அணி 17 ஓவரில் 73 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்துவிட்டதாக கருதிய இங்கிலாந்து அணிக்கு, அதன்பின்னர் தான் சிக்கலே ஆரம்பித்தது. மேக்ஸ்வெல்லும் அலெக்ஸ் கேரியும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து விக்கெட் விழுந்துவிடாமல் பார்த்துக்கொண்டதுடன் அடித்து ஆடி சீரான வேகத்தில் ஸ்கோரையும் உயர்த்தினர். இருவருமே களத்தில் நிலைத்து நின்று அபாரமாக ஆடி இருவருமே சதமடித்தனர்.

ஆறாவது விக்கெட்டுக்கு மேக்ஸ்வெல்லும் கேரியும் இணைந்து 212 ரன்களை குவித்தனர். அணியின் ஸ்கோர் 285ஆக இருந்தபோது, 48வது ஓவரின் மூன்றாவது பந்தில் அடில் ரஷீத்தின் சுழலில் மேக்ஸ்வெல் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து 49வது ஓவரின் கடைசி பந்தில் கேரியும் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் 108 ரன்களுக்கும் கேரி 106 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அவர்கள் ஆட்டமிழந்தாலும் அவர்களின் போராட்டத்தை வீணடிக்காத வகையில், கடைசி ஓவரில் மிட்செல் ஸ்டார்க் சிக்ஸரெல்லாம் விளாசி, இலக்கை எட்ட உதவினார். இதையடுத்து கடைசி ஓவரில் இலக்கை எட்டி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 2-1 என ஒருநாள் தொடரை வென்றது.

கடைசி போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் ஆகிய 2 விருதுகளையும் மேக்ஸ்வெல் தட்டிச்சென்றார்.