ஐபிஎல் 13வது சீசன் நடப்பது உறுதியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் மார்ச் 29ம் தேதி தொடங்கியிருக்க வேண்டிய ஐபிஎல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், அக்டோபர் மாதம் தொடங்கியிருக்க வேண்டிய டி20 உலக கோப்பை ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டதால், செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8 வரையிலான காலக்கட்டத்தில் ஐபிஎல்லை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. 

எனவே ஐபிஎல் செப்டம்பர் 19ம் தேதி தொடங்குவது உறுதியாகிவிட்டதால், அதற்கான வேலைகளில் பிசிசிஐ-யும் ஐபிஎல் நிர்வாகமும் ஈடுபட்டுள்ளது. வீரர்களும் பயிற்சிகளை தொடங்கிவிட்டனர். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து வீரர்களை ஐபிஎல்லில் ஆட அந்நாடுகள் அனுமதித்துள்ளன. 

ஆனால் ஐபிஎல்லின் தொடக்கத்திலிருந்து ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் ஆடமுடியாத சூழல் உருவாகியுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் இங்கிலாந்தில் நடக்கவுள்ளது. செப்டம்பர் 4 முதல் 15 வரை இந்த தொடர் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. 

அந்த தொடரை முடித்துக்கொண்டு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் அப்படியே நேராக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுவிடுவார்கள். செப்டம்பர் 15ம் தேதி தான் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து தொடர் முடிவடையும். செப்டம்பர் 19ம் தேதி ஐபிஎல் தொடங்குகிறது. எனவே ஐபிஎல் முதல் வாரத்தில் அந்த 2 நாட்டு வீரர்களும் ஆடமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். அந்தவகையில், ஐபிஎல்லில் ஆடும் வீரர்கள் முன் கூட்டியே வந்தால் தான், அவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்து, பின்னர் ஆட அனுமதிக்க முடியும். ஆஸி., மற்றும் இங்கிலாந்து வீரர்கள் செப்டம்பர் 15-16ல் தொடரை முடித்துவிட்டு, ஐபிஎல் தொடங்கும் சமயத்தில் தான் ஐக்கிய அரபு அமீரகத்திற்கே வருவார்கள். அதனால் அவர்கள் முதல் வாரத்தில் ஆடுவது சந்தேகம் தான். 

ஏற்கனவே தென்னாப்பிரிக்க வீரர்களும் முதல் சில ஐபிஎல் போட்டிகளில் ஆடமுடியாத சூழல் இருக்கும் நிலையில், இப்போது ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்களும் தாமதமாகும் நிலை உள்ளது. 

ஐபிஎல் அணிகளின் பல நட்சத்திர வீரர்கள் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள். டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், பாட் கம்மின்ஸ், மேக்ஸ்வெல், ஆரோன் ஃபின்ச், பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட பல நட்சத்திர வீரர்கள் ஐபிஎல்லில் ஆடுகின்றனர்.