ஐபிஎல் 2020க்கான ஏலம் கொல்கத்தாவில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. இந்த ஏலத்தில் மொத்தமாக 338 வீரர்கள் ஏலம் விடப்படுகின்றனர். 

முதல் வீரராக ஏலம் விடப்பட்ட ஆஸ்திரேலியாவின் அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் கிறிஸ் லின்னை அவரது அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கனை 5 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு கேகேஆர் அணியும் எடுத்தன. அதன்பின்னர் ஏலத்திற்கு வந்த இந்திய வீரர்களான புஜாரா, ஹனுமா விஹாரி ஆகியோரை எந்த அணியும் எடுக்கவில்லை. 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கழட்டிவிட்ட யூசுஃப் பதானையும் எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை. அதேபோல நியூசிலாந்து ஆல்ரவுண்டர் காலின் டி கிராண்ட் ஹோமையும் எந்த அணியும் அடிப்படை விலைக்கு எடுக்கக்கூட முன்வரவில்லை. 

ராபின் உத்தப்பாவை 3 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச்சை 4 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு ஆர்சிபி அணியும் எடுத்தன. 

அதன்பின்னர் தான் உண்மையான ஏலமே ஆரம்பமானது. ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேனும் ஆல்ரவுண்டருமான மேக்ஸ்வெல் அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு ஏலம் விடப்பட்டார். மேக்ஸ்வெல்லை எடுப்பதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கும் டெல்லி கேபிடள்ஸ் அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இரு அணிகளுமே விட்டுக்கொடுப்பதாயில்லை. மேக்ஸ்வெல்லின் தொகை 10 கோடியை கடந்த நிலையிலும் இரு அணிகளும் விடவில்லை. ஒருவழியாக ரூ.10 கோடியே 75 லட்சத்துக்கு பஞ்சாப் அணி மேக்ஸ்வெல்லை எடுத்தது.

மேக்ஸ்வெல்லுக்கே கடும் போட்டி நிலவிய நிலையில், அடுத்ததாக ஏலத்திற்கு வந்த பாட் கம்மின்ஸுக்கு அதைவிட கடும் போட்டி நிலவியது. ஆல்ரவுண்டரான கம்மின்ஸை எடுக்க ஆர்சிபி அணியும் டெல்லி கேபிடள்ஸ் அணியும் ஆர்வம் காட்டின. இரு அணிகளும் கடுமையாக போட்டி போட்டன. சற்றும் யோசிக்காமல் மாறி மாறி ஏலம் எடுத்தனர். ஏலம் 15 கோடியை கடந்ததும், இரு அணிகளும் கொஞ்சம் பொறுமையாக யோசித்து செயல்பட்டன.

இரு அணிகளும் கடுமையாக போட்டியிட்டன. ஆனால் கடைசியில் நடந்தது மிகப்பெரிய அதிர்ச்சி சம்பவம். இரு அணிகளுக்குமே இல்லாமல் திடீரென உள்ளே புகுந்த கேகேஆர் அணி, கம்மின்ஸை 15 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.