Asian Games 2026: ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஜப்பானை ஊதித்தள்ளி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி அரையிறுதியில் வங்கதேசத்துடன் மோதுகிறது.

ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட் காலிறுதிப் போட்டியில் ஜப்பான் அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு கெத்தாக என்ட்ரி கொடுத்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த ஜப்பான் அணி 19.5 ஓவர்களில் வெறும் 57 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த எளிதான இலக்கை விரட்டிய இந்திய அணி, வெறும் 5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து அபார வெற்றி பெற்றது.

அதிரடியாக ஆடிய ஷஃபாலி வர்மா வெறும் 15 பந்துகளில் 40 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ரிச்சா கோஷ் 12 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார். குலான் கமலினி (0), பாரதி ஃபுல்மாலி (6) ஆகியோர் சீக்கிரமே விக்கெட்டை பறிகொடுத்தனர்.

India Vs West Indies: ரோஹித், கோலி ரிட்டர்ன்ஸ்! 6 பேருக்கு கல்தா; அகர்கர் போட்ட அதிரடி

இந்திய அணி அபாரம்

டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த ஜப்பான் அணியில், ஓப்பனர்கள் ஐகா கட்டோ ஸ்டாஃபோர்ட் (25 ரன்கள்), ஹருணா இவாசகி (10 ரன்கள்) ஆகிய இருவர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை தொட்டனர். கேப்டன் மை யானகிடா கோல்டன் டக் ஆனார். முதல் விக்கெட்டுக்கு 24 ரன்கள் சேர்த்த ஜப்பான், அடுத்த 33 ரன்கள் எடுப்பதற்குள் மீதமிருந்த எல்லா விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.

ஜப்பான் பேட்டர்கள் தங்களது முழு இன்னிங்ஸிலும் வெறும் 3 பவுண்டரிகளை மட்டுமே அடித்தனர். இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஸ்ரீ சரிணி 4 ஓவர்களில் வெறும் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை அள்ளினார். ஷஃபாலி வர்மா 4 ஓவர்களில் 13 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நேற்று நடந்த மற்றொரு காலிறுதிப் போட்டியில் தாய்லாந்து அணியை எதிர்த்து பாகிஸ்தான் போராடி வெற்றி பெற்றது. மழையால் பாதிக்கப்பட்ட இந்தப் போட்டியில் பாகிஸ்தானுக்கு 11 ஓவர்களில் 92 ரன்கள் டார்கெட் நிர்ணயிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் 47 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய பாகிஸ்தான், கடைசியில் 2 பந்துகள் மீதமிருக்க 7 விக்கெட்டுகளை இழந்து த்ரில் வெற்றி பெற்றது.

அரையிறுதிக்கு தயாரான அணிகள்

சீனா மற்றும் வங்கதேசம் இடையேயான முதல் காலிறுதிப் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால், தரவரிசையில் முன்னிலையில் உள்ள வங்கதேச அணி அரையிறுதிக்கு முன்னேறியது. தாய்லாந்துக்கு எதிரான இரண்டாவது காலிறுதியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்து அரையிறுதிக்குள் நுழைந்தது. இலங்கை மற்றும் மலேசியா இடையேயான மூன்றாவது காலிறுதியில் இலங்கை மகளிர் அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. நான்காவது காலிறுதியில் ஜப்பான் அணியை அசால்ட்டாக ஊதித்தள்ளிய இந்தியா அரையிறுதிக்கு என்ட்ரி கொடுத்துள்ளது.

Womens Asia Cup 2026: பழிதீர்த்த இந்தியா..! 8வது முறையாக ஆசிய கோப்பையை வென்று சாதனை..!

இந்தியா, வங்கதேசம் செமி பைனல்

செப்டம்பர் 20-ம் தேதி நடக்கவுள்ள முதல் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை மகளிர் அணிகள் மோதவுள்ளன. அதே நாளில் நடக்கும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஃபைனல் டிக்கெட்டுக்காக இந்திய மற்றும் வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.