Asianet News TamilAsianet News Tamil

சிஎஸ்கேவின் வெற்றிதான் எங்களுக்கு உத்வேகம் அளித்தது..! ஆசிய கோப்பையை வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா

ஆசிய கோப்பை ஃபைனலில் பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடி இலங்கை அணி கோப்பையை வென்றதற்கு சிஎஸ்கே அணி தான் உத்வேகமளித்ததாக இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா தெரிவித்துள்ளார்.
 

asia cup winning sri lanka captain dasun shanaka said that he has inspired csk win in ipl 2022
Author
First Published Sep 12, 2022, 3:45 PM IST

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. ஆசிய கோப்பையில் ஒன்றிரண்டு போட்டிகள் மட்டுமே ஷார்ஜாவில் நடந்தன. மற்ற அனைத்து போட்டிகளுமே துபாயில் தான் நடந்தன.

துபாயில் பொதுவாகவே 2வது இன்னிங்ஸில் இலக்கை விரட்டும் அணியே வெற்றி பெறுகிறது. ஆசிய கோப்பை தொடரிலும் அதுதான் நடந்தது. டாஸ் ஜெயித்தால் மேட்ச் ஜெயிக்கலாம் என்ற நிலைதான் இருந்தது. அதுமட்டுமல்லாது இலங்கை அணியும் சேஸிங்கில் தான் வெற்றிகரமாக திகழ்ந்ததே தவிர, முதலில் பேட்டிங் ஆடிய போட்டிகளில் தோல்விகளை தழுவியது.

இதையும் படிங்க - அன்றே எச்சரித்த வாசிம் அக்ரம்.. தோற்ற பின்னும் முட்டுக்கொடுக்கும் பயிற்சியாளர் சக்லைன் முஷ்டாக்

எனவே ஆசிய கோப்பை ஃபைனலில் பாகிஸ்தான் டாஸ் ஜெயித்து ஃபீல்டிங்கை தேர்வு செய்ததுமே, கிட்டத்தட்ட பாகிஸ்தான் கோப்பையை வென்றுவிட்டதாகவே பார்க்கப்பட்டது. அதற்கேற்பவே, முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 58 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஆனால் ராஜபக்சாவின் அதிரடி அரைசதம் (45 பந்தில் 71 ரன்கள்) மற்றும் ஹசரங்காவின் அதிரடி பேட்டிங்கால்(21 பந்தில் 36 ரன்கள்) 20 ஓவரி 170 ரன்களை குவித்தது.

172 ரன்கள் என்பது ஃபைனலை பொறுத்தமட்டில் கடினமான இலக்கே. இலங்கை அணி எளிதாக ரன்னை விட்டுக்கொடுக்காமல் கட்டுப்படுத்தியதுடன், பாபர் அசாம், ஃபகர் ஜமான் ஆகியோரை ஆரம்பத்திலேயே வீழ்த்திவிட்டதால் ரிஸ்வான் அரைசதம் அடித்தும் அது பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது. தசுன் ஷனாகாவின் அபாரமான கேப்டன்சி, பவுலர்களின் சிறப்பான பவுலிங், அருமையான ஃபீல்டிங் என அனைத்துவிதத்திலும் சிறப்பாக செயல்பட்டு பாகிஸ்தான் மீது அழுத்தம் போட்டு ஜெயித்தது இலங்கை அணி.

அண்மைக்காலத்தில் தங்களுக்கு பழக்கப்படாத விஷயத்தில், அதாவது முதலில் பேட்டிங் ஆடி வெற்றி பெற்றிராத நிலையில், ஃபைனலில் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக ஆடி 171 ரன்கள் என்ற இலக்கை அடிக்கவிடாமல் பாகிஸ்தானை தடுத்து வெற்றி பெற்றது இலங்கை அணி.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடி இலக்கை அடிக்கவிடாமல் கட்டுப்படுத்தி இலங்கை ஜெயிக்க உத்வேகமாக இருந்தது, 2021 ஐபிஎல் ஃபைனலில் இதே துபாயில் சிஎஸ்கே அணியின் வெற்றிதான் என்று குறிப்பிட்டுள்ளார் தசுன் ஷனாகா.

போட்டிக்கு பின் பேசிய இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா, 2021 ஐபிஎல் ஃபைனலில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் ஆடி இலக்கை அடிக்கவிடாமல் கட்டுப்படுத்தி ஜெயித்தது மட்டும்தான் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. இளம்வீரர்கள் கண்டிஷனை நன்கறிந்து சிறப்பாக ஆடினார்கள். ஹசரங்கா நன்கு பேட்டிங் ஆடினார். கடைசி பந்தில் ராஜபக்சா சிக்ஸர் அடித்து முடித்ததுதான் ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்பியது. 160 ரன்கள் என்பது விரட்டக்கூடிய இலக்குதான். நாங்கள் 170 ரன்கள் அடித்ததுதான் வெற்றிக்கு வித்திட்டது என்றார் ஷனாகா.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: இந்திய அணியின் ஆடும் லெவனில் ராகுலுக்கு இடம் இல்லை..?

2021 ஐபிஎல் ஃபைனலில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவரில் 192 ரன்கள் அடித்து, கேகேஆரை 165 ரன்களுக்கு சுருட்டி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios