ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் இந்த போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்தியாவும், வங்கதேசமும் இன்று மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஜாக்கர் அலி தங்கள் அணி முதலில் பவுலிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. வங்கதேச அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

வங்கதேச கேப்டன் திடீர் விலகல்

வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் பயிற்சியின்போது காயம் அடைந்தார். இதனால் இன்றைய போட்டியில் ஜாக்கர் அலி கேப்டனாக செயல்படுகிறார். இந்திய அணியை பொறுத்தவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய வீரர்களே இன்றைய போட்டியிலும் விளையாடுகிறார்கள்.

இந்திய அணி ஆதிக்கம்

முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்திய வங்கதேசம், இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு செல்லும் முனைப்பில் உள்ளது. இதேபோல் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி, வங்கதேசத்தையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு செல்ல ரெடியாக உள்ளது. வீரர்களின் பலம், ஃபார்ம் மற்றும் புள்ளிவிவரங்களில் இந்திய அணி வங்கதேசத்தை விட மிகவும் முன்னிலையில் உள்ளது. கடைசி 32 டி20 போட்டிகளில் இந்தியா மூன்றில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது.

இந்தியாவின் அதிரடி சூரர்கள்

அபிஷேக் ஷர்மா மற்றும் சுப்மன் கில் நிலைத்து நின்றால் வங்கதேச அணியின் பாடு திண்டாட்டம் தான். சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல் ஆகியோரும் வேகமாக ரன் குவிப்பவர்கள் என்பதால் வங்கதேச அணி தொடக்கம் முதலே ஸ்பின்னர்களை வைத்து இந்திய அணியின் ரன் வேகத்தை குறைக்க முயற்சிக்கும்.

ஸ்பின்னுக்கு உகந்த ஆடுகளம்

ஸ்பின்னுக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் முஸ்தாபிசுர் ரஹ்மானின் பந்துவீச்சை வங்கதேசம் நம்பியுள்ளது. இதேபோல் குல்தீப் யாதவ், அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தின் போக்கை தீர்மானிப்பார்கள். இதுவரை நேருக்கு நேர் மோதிய 17 போட்டிகளில் 16ல் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது. வங்கதேசம் 2019ம் ஆண்டு ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இரு அணிகளின் பிளேயிங் லெவன்

இந்திய அணி பிளேயிங் லெவன்: அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி.

வங்கதேச அணி பிளேயிங் லெவன்: சைய்ஃப் ஹசன், தன்சித் ஹசன் தமீம், பர்வேஸ் ஹொசைன் இமோன், தௌஹித் ஹிரிடோய், ஷமீம் ஹொசைன், ஜாக்கர் அலி (கேப்டன்), முகமது சைஃபுதீன், ரிஷாத் ஹொசைன், தன்சிம் ஹசன் சாகிப், நசும் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான்.