Asia Cup 2025: இந்திய பாஸ்ட் பவுலர் அர்ஷ்தீப் சிங் டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஆசிய கோப்பையில் ஓமனுக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை பதிவு செய்தார்.
ஆசிய கோப்பை 2025 தொடரின் 12வது போட்டியில், ஓமன் அணியை வீழ்த்தி இந்திய அணி தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்கிறது. குரூப் சுற்றின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் ஓமனை வீழ்த்தியது. ஓமனுக்கு எதிரான போட்டியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் புதிய வரலாறு படைத்துள்ளார்.
அர்ஷ்தீப் சிங் வரலாற்று சாதனை
அதாவது இந்தப் போட்டியில், அர்ஷ்தீப் சிங் T20i போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். ஓமன் வீரர் விநாயக் சுக்லாவை ஆட்டமிழக்கச் செய்து இந்த சாதனையை அவர் நிகழ்த்தினார். இதுவரை எந்த இந்திய பந்துவீச்சாளரும் டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை. தற்போது அந்த பட்டியலில் இணைந்த முதல் இந்திய பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஆவார்.
இந்திய அணி போராடி வெற்றி
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் முதல் இரண்டு ஆட்டங்களில் விளையாடாத அர்ஷ்தீப் சிங், ஓமனுக்கு எதிராக விளையாடிய முதல் போட்டியிலேயே சாதனை படைத்து அசத்தியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்றில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பது உறுதியாக தெரியவில்லை. ஓமனுக்கு எதிரான இந்த போட்டியில் இந்திய அணி போராடியே வெற்றி பெற்றது. முதலில் இந்திய அணி பேட்டிங் செய்த நிலையில், ஓமன் வீரர்களின் சூப்பரான பந்து வீச்சால் இந்தியா 188 ரன்களில் முடங்கியது.
பேட்டிங், பவுலிங்கில் மாஸ் காட்டிய ஓமன்
இந்திய அணியில் சஞ்சு சாம்சன் 45 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 56 ரன் எடுதது அசத்தினார். ஓமன் தரப்பில் ஷா பைசல், ஜிதேன் ராமானந்தி, ஆமிர் கலீம் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். பின்பு விளையாடிய ஓமன் அணி 0 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்து நெருங்கி வந்து தோற்றது. அந்த அணியின் ஆமிர் கலீம் 46 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 64 ரன்கள் எடுத்தார். ஹம்மாத் மிர்ஸா 33 பந்தில் 5 பவுண்டரி 2 சிக்சருடன் 51 ரன் எடுத்து சிறப்பாக பேட்டிங் செய்தார்.
