ஜிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாக நடவடிக்கைகளில் அரசின் தலையீடுகள் அதிகமாக இருந்ததால், ஜிம்பாப்வே அணிக்கு அதிரடியாக தடை விதித்தது ஐசிசி. 

ஐசிசி-யில் உறுப்பினராக இருக்கும் சர்வதேச கிரிக்கெட் அணிகளின், கிரிக்கெட் வாரிய நிர்வாக நடவடிக்கைகளில் அரசின் தலையீடு இருக்கக்கூடாது. கிரிக்கெட் வாரியம் தன்னிச்சையான அமைப்பாக செயல்பட வேண்டும். ஆனால் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தில் அந்நாட்டு அரசின் தலையீடு அதிகமாக இருந்தது. 

அதனால் ஜிம்பாப்வே அணிக்கு கிரிக்கெட் ஆட தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்தது ஐசிசி. மேலும் அந்த அணிக்கு ஐசிசி சார்பில் வழங்கப்பட்ட வளர்ச்சி நிதியும் நிறுத்தப்பட்டது. இந்த தடையால் இனிமேல் ஜிம்பாப்வே அணி சர்வதேச போட்டிகளில் ஆடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் ஜிம்பாப்வே வீரர்கள் மனம் உடைந்து நொந்து போயுள்ளனர். அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கை அஸ்தமனமாகிவிட்டது. அவர்களின் கிரிக்கெட் எதிர்காலமே முடிந்துவிட்டது. 

இதுகுறித்த தனது வேதனையை ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ரஸா, எங்களது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது. கிரிக்கெட்டிலிருந்தே ஒட்டுமொத்தமாக தடை விதிக்க எப்படி முடிந்தது..? இனிமேல் எங்களால் கிரிக்கெட் ஆடமுடியாது. சர்வதேச வீரர்களான நாங்கள் எங்கு செல்வது..? கிளப் கிரிக்கெட்டுக்கா..? எங்களின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது என்பதை நினைக்கும்போது மனம் உடைந்துவிட்டது. இதிலிருந்து எப்படி மீளமுடியும் என்று தெரியவில்லை. நாங்கள் கிரிக்கெட் பேக்கை எரித்துவிட்டு வேறு வேலை தேட வேண்டியதுதானா? எங்கள் கிரிக்கெட்டும் வாழ்வாதாரமும் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. நான் என்ன சொன்னாலும் பிரயோஜனம் இல்லை என்பது எனக்கு தெரியும். கிரிக்கெட்டை வளர்க்க வேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் கிரிக்கெட் தேய்ந்துகொண்டிருக்கிறது என்று தனது வேதனையை வெளிப்படுத்தியிருந்தார். 

ஜிம்பாப்வே அணியின் நிலைமையையும் சிக்கந்தரின் வேதனையையும் கண்டு அவர்களுக்காக வருத்தம் தெரிவித்துள்ளார் ரவிச்சந்திரன் அஷ்வின். தனது வருத்தத்தை அஷ்வின் டுவீட் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அஷ்வின், ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் இது இதயத்தை நொறுக்கும் செய்தி. சிக்கந்தரின் வேதனை வெளிப்பாடு, அந்த அணி வீரர்கள் எந்தளவிற்கு பெருந்துயரில் இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. ஜிம்பாப்வே அணி நல்ல கிரிக்கெட் ஆடும் அணியாகும். அந்த அணி திரும்ப கிரிக்கெட் ஆட வேண்டும் என்று நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று அஷ்வின் தெரிவித்துள்ளார்.