இந்திய அணியின் நட்சத்திர ஸ்பின்னர் அஷ்வின். ஒருநாள் மற்றும் டி20 அணிகளிலிருந்து ஓரங்கட்டப்பட்டாலும், டெஸ்ட் அணியின் நட்சத்திர ஸ்பின்னராக அஷ்வின் ஜொலிக்கிறார். அதிவேக 250, 300, 350 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்கிறார். 

2010ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான அஷ்வின், இதுவரை 70 டெஸ்ட் போட்டிகளிலும் 111 ஒருநாள் போட்டிகளிலும் 46 டி20 போட்டிகளிலும் ஆடியுள்ளார். 2017ம் ஆண்டுக்கு பிறகு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அஷ்வின் ஆடவில்லை. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து ஆடிவரும் அஷ்வின், டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரராக ஜொலிக்கிறார். 

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக நியூசிலாந்தில் உள்ளார் அஷ்வின். இந்நிலையில், கிரிக்பஸ் ஸ்போர்ட்ஸ் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த அஷ்வின், தனக்கு கேரம் பந்து வீச கற்றுக்கொடுத்தது யார் என்ற தகவலை பகிர்ந்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அஷ்வின், முதல் முறையாக நான் டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் ஆட சென்று பேட்டிங் ஆடியபோது, அங்கு ஒரு பையன் சிறந்த பவுலிங் ஆக்‌ஷனுடன் பந்தை இரண்டு திசைகளிலும் டர்ன் செய்தார். அவரை அதன்பின்னர் இன்றுவரை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், இன் - அவுட் என இரண்டு பக்கத்திலும் பந்தை சுழற்றும் ஒரு சிறந்த ஸ்பின்னரை நான் இன்றுவரை பார்க்கவில்லை. நான் என் வாழ்வில் பார்த்த சிறந்த ஸ்பின்னர் அவர் தான். அவரது பெயர் எஸ்கே. அவர்தான் எனக்கு கேரம் பந்து வீச கற்றுக்கொடுத்தார். 

அவரது பவுலிங்கின் மூலம் அவர் என்னை முட்டாளாக்கினார். அவரிடமிருந்து ஸ்பின்னை கற்றுக்கொள்ள விரும்பினேன். அதனால் அடுத்த 10-15 நாட்களுக்கு தினமும் காலையிலேயே சென்றுவிடுவேன். அவர் அந்த 15 நாட்களும் எனக்கு பந்துவீச்சில் பல உத்திகளை கற்றுக்கொடுத்தார். அதன்பின்னர் அவரை நான் இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று அஷ்வின் தெரிவித்தார். 

இந்நிலையில், அந்த நபரை தேடிக்கண்டுபிடித்த கிரிக்பஸ் இணையதளம், அவரிடம், அஷ்வின் பேசியது குறித்து கருத்தும் கேட்டுள்ளது. அஷ்வின், எஸ்கே என்று குறிப்பிட்ட அந்த நபரின் பெயர் கார்த்திக் சேகர். அவர் அஷ்வின் தன்னை நினைவில் வைத்து பேசியது குறித்து நெகிழ்ச்சியடைந்துள்ளார். 

Also Read - ஈகோவுக்குலாம் இங்க இடமே கிடையாது.. டி20 உலக கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணியில் டிவில்லியர்ஸ்

“அஷ்வின் செம சர்ப்ரைஸா இருக்கு.. நான் தான் நீ சொன்ன எஸ்கே.. என்னை நீ புகழ்ந்து பேசியது ரொம்ப பெரிய விஷயம். நீ என்னை பற்றி பேசியது மிகப்பெரிய சர்ப்ரைஸ்களில் ஒன்று. உன்னை நினைத்தால் எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. டென்னிஸ் பந்தில் ஆட தொடங்கி, தற்போது இந்திய அணிக்காக ஆடி பெருமை தேடித்தந்து கொண்டிருக்கிறாய். இன்னும் நீண்ட தூரம் பயணித்து நீ நிரைய சாதனைகளை செய்ய வேண்டும். என்னுடைய கேரம் பந்து அந்தளவிற்கு சிறப்பானதாக இருந்திருந்தால், அதை நினைத்து நான் வியக்கிறேன். இதேபோல் தொடர்ந்து நாங்கள் பெருமைப்படும்படியாக சாதித்துக்கொண்டே இரு என்று எஸ்கே தெரிவித்துள்ளார்.