இந்தியா - வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிவரும் வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் இருவருமே தலா 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். மிதுன் 13 ரன்களுக்கு அவுட்டானார். 31 ரன்களுக்கே மூன்று விக்கெட்டுகளை இழந்துவிட்ட வங்கதேச அணிக்கு, மோமினுல் ஹக்கும் முஷ்ஃபிகுரும் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்து ஆடினர். 

இவர்கள் இருவரும் நிறைய கேட்ச் வாய்ப்புகளை கொடுத்தனர். ஆனால் கோலி, ரஹானே ஆகிய முக்கியமான வீரர்கள் அந்த கேட்ச்களை தவறவிட்டனர். மோமினுல் ஹக்கும் முஷ்ஃபிகுரும் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 68 ரன்களை சேர்த்தனர். இந்த பார்ட்னர்ஷிப்பை பிரிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருந்த நிலையில், மோமினுல் ஹக்கின் விக்கெட்டை அஷ்வின் வீழ்த்தினார். 37 ரன்களில் அவரை போல்டாக்கி அனுப்பினார் அஷ்வின். 

இது இந்தியாவில் அஷ்வினுக்கு 250வது விக்கெட். இதன்மூலம் சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விரைவில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களின் பட்டியலில், முத்தையா முரளிதரனுடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளார் அஷ்வின். அஷ்வின் இந்தியாவில் 42வது டெஸ்ட் போட்டியில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். முரளிதரனும் 42வது போட்டியில்தான் சொந்த மண்ணில் 250 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டியிருந்தார். இவர்களுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் 43 போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய அனில் கும்ப்ளே உள்ளார். 

ஒட்டுமொத்தமாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் விரைவில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலிலும் அஷ்வின் தான் முதலிடத்தில் உள்ளார். தனது 45வது சர்வதேச டெஸ்ட் போட்டியில் 250வது விக்கெட்டை அஷ்வின் வீழ்த்தியிருந்தார். இந்த மைல்கல்லையும் வங்கதேசத்துக்கு எதிராகத்தான் அஷ்வின், கடந்த 2017ம் ஆண்டு எட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மோமினுல் ஹக்கை தொடர்ந்து மஹ்மதுல்லாவையும் அஷ்வின் போல்டு செய்து அனுப்பினார். வங்கதேச அணி 5 விக்கெட்டுகளை இழந்து ஆடிவருகிறது.