இந்திய அணியின் கேப்டனாக கோலியும் தலைமை தேர்வாளராக எம்.எஸ்.கே.பிரசாத்தும் பொறுப்பேற்றது முதலே, அணியில் சிறந்த சில வீரர்களுக்கு தொடர் வாய்ப்புகள் அளிப்பதில்லை என்ற விமர்சனம் இருந்துவருகிறது. 

சில வீரர்களை அணியில் எடுப்பதும் தூக்குவதுமாகவே இருந்தனர். 2019 உலக கோப்பைக்கு முன், நான்காம் வரிசை வீரருக்கான தேடலில் எந்த வீரருக்குமே தொடர் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இந்திய ஒருநாள் அணியில் மிடில் ஆர்டர் சிக்கல் இருக்கிறது என்று தெரிந்தும்கூட, 2017ல் இலங்கைக்கு எதிரான தொடரில் நன்றாக ஆடிய ஷ்ரேயாஸ் ஐயருக்கு அதன்பின்னர் வாய்ப்பளிக்கவில்லை. சிறப்பாக ஆடி நான்காமிடத்தை உறுதி செய்த ராயுடு, உலக கோப்பை அணியில் கழட்டிவிடப்பட்டார். 

அதேபோல ஏராளமான வீரர்களை சேர்ப்பதும் நீக்குவதுமாக இருந்தனர். வீரர்களுக்கு தொடர் வாய்ப்பளித்து, அணியில் அவர்களுக்கான இடம் உறுதி என்ற உத்தரவாதத்தை வழங்கினால் தான் அவர்களால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். எனவே அந்த நம்பிக்கையை தேர்வுக்குழுவும் அணி நிர்வாகமும் வீரர்களுக்கு அளிக்க வேண்டும் என்று அப்போதே பல முன்னாள் வீரர்கள் வலியுறுத்தினர். ஆனால் தேர்வுக்குழுவும் அணி நிர்வாகமும் அதையெல்லாம் கண்டுகொள்ளவேயில்லை. 

இந்நிலையில், இந்திய அணியின் இந்த செயல்பாட்டை விமர்சித்துள்ளார் முன்னாள் வீரர் ஆஷிஸ் நெஹ்ரா. இதுகுறித்து பேசியுள்ள ஆஷிஸ் நெஹ்ரா, கடந்த 2 ஆண்டுகளில் சில வீரர்களுக்கு அணியில் நிரந்தர இடம் அளிக்கவில்லை. சேர்ப்பதும் தூக்குவதுமாகவே இருந்தனர். அது சரியான அணுகுமுறையல்ல. தேர்வுக்குழுவை பொறுத்தமட்டில் பார்த்தால், குறைவான வீரர்களை மட்டுமே தேர்வு செய்துள்ளனர். ஆனால் அதிகமானோரை புறக்கணித்துள்ளனர். அது நல்லதல்ல. 

ஆஸ்திரேலிய அணி 1999, 2003, 2007 என தொடர்ச்சியாக மூன்று உலக கோப்பைகளை வென்றது. 1996 உலக கோப்பையிலும் ஃபைனல் வரை சென்றது. அந்த அணியின் கோர் டீம் வலுவாக இருந்ததுதான் அதற்கு காரணம். கோர் டீம் வலுவாக இருக்க வேண்டும். தற்போதைய இந்திய அணியில் நிறைய திறமையான விரர்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு ஆதரவளித்து நீண்டகாலம் தொடர்ச்சியாக ஆட வாய்ப்பளிக்க வேண்டும். ஒருநாள் போட்டியில் 5 மற்றும் ஆறாம் வரிசையில் யார் இறங்குவார்கள் என்பதே உறுதியாக இல்லை. 

கேஎல் ராகுல் ஐந்தாம் வரிசையில் இறங்குகிறார். தோனிக்கு மாற்றாக வளர்க்கப்பட்டுவரும் ரிஷப் பண்ட் தண்ணீர் எடுத்து செல்கிறார். பண்ட் அவருக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்பதையும் மறுத்துவிடமுடியாது என்று ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.