தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியின் கடைசி ஓவரில் தினேஷ் கார்த்திக்கிற்கு ஹர்திக் பாண்டியா சிங்கிள் மறுத்ததை கடுமையாக விமர்சித்துள்ளார் ஆஷிஷ் நெஹ்ரா.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 211 ரன்களை குவித்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். அதிகபட்சமாக அவர் 48 பந்தில் 76 ரன்களை குவித்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 27 பந்தில் 36 ரன்கள் அடித்தார். டெத் ஓவரில் அடித்து ஆடிய ஹர்திக் பாண்டியா 12 பந்தில் 31 ரன்கள் அடித்து சிறப்பாக முடித்து கொடுத்தார். இதையடுத்து 20 ஓவரில் 211 ரன்கள் அடித்தது இந்திய அணி.
212 ரன்கள் என்பது கடினமான இலக்குதான் என்றாலும், டேவிட் மில்லர்(64) மற்றும் வாண்டர் டசன்(75) ஆகிய இருவரின் அதிரடி அரைசதங்களால் கடைசி ஓவரின் முதல் பந்திலேயே இலக்கை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக அபார வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்கா.
இந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங் ஆடியபோது கடைசி ஓவரில் 2 பெரிய வீரர்கள் களத்தில் இருந்தனர். ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய 2 சிறந்த ஃபினிஷர்கள் களத்தில் இருந்தனர். கடைசி ஓவரின் முதல் பந்தில் விக்கெட் விழ, 2வது பந்தில்களத்திற்கு வந்த தினேஷ் கார்த்திக் ரன் அடிக்கவில்லை. 3வது பந்தில் சிங்கிள் எடுத்தார். முந்தைய ஓவர்களில் சிக்ஸர்களை பறக்கவிட்டு நல்ல டச்சில் இருந்த ஹர்திக் பாண்டியா, 4வது பந்தில் சிக்ஸர் அடித்தார். 5வது பந்தில் பெரிய ஷாட் ஆட முடியவில்லை. ஆனால் சிங்கிள் ஓடியிருக்கலாம். மறுமுனையில், ஐபிஎல்லில் சிறந்த ஃபினிஷராக ஜொலித்த மற்றும் பெஸ்ட் ஸ்டிரைக் ரேட்டில் சீசனை முடித்த தினேஷ் கார்த்திக் தான் களத்தில் இருந்தார். ஆனால் ஒரு பவுலருக்கு சிங்கிள் மறுப்பதை போல, தினேஷ் கார்த்திக்கிற்கு மறுத்தார் பாண்டியா.
தினேஷ் கார்த்திக்கிற்கு பாண்டியா சிங்கிள் மறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தினேஷ் கார்த்திக்கிற்கு சிங்கிள் மறுத்த பாண்டியா ஒன்றும் கடைசி பந்தில் சிக்ஸருடன் முடிக்கவில்லை. 2 ரன்னில் தான் முடித்தார். அதைவிட நன்றாக தினேஷ் கார்த்திக் முடித்திருக்கக்கூடும். ஆனால் தான், நல்ல டச்சில் இருந்ததால் பாண்டியா சிங்கிள் மறுத்துவிட்டார். ஆனாலும் அது சரியான செயல் அல்ல.
ஹர்திக் பாண்டியாவின் செயல் இந்திய அணி, ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் என அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது.
இந்த சம்பவம் குறித்து ஹர்திக் பாண்டியா ஐபிஎல்லில் கேப்டனாக செயல்படும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவும், பாண்டியாவின் செயலால் அதிருப்தியடைந்துள்ளார்.
இதுகுறித்து கருத்து கூறியுள்ள ஆஷிஷ் நெஹ்ரா, கடைசி ஓவரில் பாண்டியா சிங்கிள் எடுத்திருக்க வேண்டும். மறுமுனையில் நின்றது தினேஷ் கார்த்திக்; நான் அல்ல என்று நெஹ்ரா கூறியுள்ளார்.
அதாவது பேட்டிங் பெரிதாக ஆடத்தெரியாத தன்னைப்போன்ற பவுலர் எவரும் மறுமுனையில் நிற்கவில்லை. சிறந்த ஃபினிஷரான தினேஷ் கார்த்திக் மறுமுனையில் நிற்கும்போது பாண்டியா இப்படி செய்தது சரியல்ல என்று நெஹ்ரா விமர்சித்துள்ளார்.
