கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐபிஎல் 13வது சீசன் நடப்பது உறுதியாகியுள்ளது. டி20 உலக கோப்பை ஓராண்டு ஒத்திவைக்கப்பட்டதால், செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8 வரை ஐபிஎல்லை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துகிறது பிசிசிஐ. 

ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் வீரர்களும் தயாராகிவருகின்றனர். கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஐபிஎல் தொடர் நடத்தப்படவுள்ளது. இருதரப்பு கிரிக்கெட் தொடர் போன்றதல்ல ஐபிஎல். ஐபிஎல்லில் அனைத்து நாட்டு வீரர்களும் ஆடுகின்றனர். எனவே இது சர்வதேச அளவில் பலரது பாதுகாப்பு சார்ந்த விஷயம். அதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வீரர்கள் பின்பற்றி நடக்க வேண்டியது அவசியம். 

சர்வதேச அளவில் அனைத்து நாட்டு வீரர்களையும் ஒருங்கிணைத்து, அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் மிகவும் பாதுகாப்பான முறையில் ஏற்பாடுகளை செய்து, ஐபிஎல்லை நடத்தி முடிப்பது என்பது மிகச்சவாலான காரியம். அதற்கு வீரர்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது அவசியம். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரின் போது, ஜோஃப்ரா ஆர்ச்சர் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றாமல், தனது சொந்த ஊருக்கு சென்று திரும்பிய சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்து, ஆர்ச்சருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் அபராதமும் விதிக்கப்பட்டது. 

இந்நிலையில், அந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி வீரர்களின் ஒத்துழைப்பை கோரியுள்ளார் ஆஷிஸ் நெஹ்ரா. இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய ஆஷிஸ் நெஹ்ரா, ஜோஃப்ரா ஆர்ச்சர் சம்பவம் ஒன்றை பார்த்திருக்கிறோம். ஐபிஎல்லில் இதுமாதிரியான விதிமீறல் சம்பவங்கள் நடக்காது என நம்புவோம். ஐபிஎல்லை நடத்துவது என்பது இருதரப்பு தொடர் போன்றதல்ல. ஐபிஎல்லை நடத்துவது கொஞ்சம் கஷ்டம். எனவே ஐபிஎல்லை நல்ல, பாதுகாப்பான முறையில் நடத்தி முடிக்க வீரர்கள் பிசிசிஐ-க்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.