பும்ரா இந்திய அணிக்கு வந்த பிறகுதான், இந்திய அணி பவுலிங்கில் தலைசிறந்து விளங்க தொடங்கியது. பும்ராவின் வருகைக்கு பிறகு, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய அணி ஃபாஸ்ட் பவுலிங்கில் தலைநிமிர்ந்தது. 

பும்ரா, ஷமி ஆகிய இருவரும் மூன்றுவிதமான போட்டிகளிலும் விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்து இந்திய அணிக்கு வெற்றிகளை தேடித்தந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் இருவரும் பெரும்பாலான விக்கெட்டுகளை வீழ்த்திவிடுவதால், மற்ற பவுலர்கள் கூட்டத்தோடு கோவிந்தா போட்டு போய்விடுகின்றனர். 

இந்நிலையில், காயத்தால் சில தொடர்களில் ஆடமுடியாத பும்ரா, காயத்திலிருந்து மீண்டு, இலங்கைக்கு எதிரான தொடரில் மீண்டும் அணியில் இடம்பிடித்தார். காயத்திலிருந்து மீண்டுவந்தபிறகு, அவரது பவுலிங் முன்புபோல் இல்லை. 

இந்திய அணிக்கு விக்கெட் தேவைப்படும்போதெல்லாம், அதை வீழ்த்தி கொடுத்து, டெத் ஓவர்களில் எதிரணிக்கு மெர்சல் காட்டி வெற்றிகளை குவித்து கொடுக்கும் பும்ரா, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை என்பது வேதனையான விஷயம். பும்ராவின் கெரியரில் முதல் முறையாக 3 ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தாமல் இருந்திருக்கிறார்.

பும்ராவின் பவுலிங் எடுபடவில்லை, ஷமியும் ஆடும் லெவனில் இல்லை. எனவே இந்திய அணியின் பவுலிங் படுமோசமாக இருந்ததால், 3 போட்டிகளிலும் தோற்று, நியூசிலாந்திடம் ஒயிட்வாஷ் ஆகி அசிங்கப்பட்டது இந்திய அணி. 

இந்நிலையில், பும்ராவிற்கு ஆதரவாக முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஆஷிஷ் நெஹ்ரா கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள நெஹ்ரா, எல்லா தொடர்களிலுமே பும்ரா மிகச்சிறப்பாக பந்துவீச வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. அவர் காயத்திலிருந்து இப்போதுதான் மீண்டு வந்துள்ளார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எல்லா போட்டிகளிலும் எல்லா நேரத்திலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று யாரிடமுமே எதிர்பார்க்கக்கூடாது. கோலி கூட சில தொடர்களில் சரியாக ஆடாமல் இருந்திருக்கிறார். 

Also Read - அந்த வீரரை அணியில் சேர்க்காததால் இழப்பு அணிக்குத்தான்; அவருக்கு இல்ல.. முன்னாள் வீரர் தடாலடி

பும்ராவும் ஷமியும் மட்டுமே கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பாக பந்துவீசி கொண்டிருக்கின்றனர். மற்ற பவுலர்களும் அவர்களது ரோலை உணர்ந்து செயல்பட வேண்டும். பும்ராவிற்கு அதிகமான அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அணி நிர்வாகம் அணி தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தி சிறப்பான ஆடும் லெவனை தேர்வு செய்ய வேண்டும் என்று ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.