ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ளது. 

லார்ட்ஸில் கடந்த 14ம் தேதி தொடங்கியிருக்க வேண்டிய போட்டி மழையால், ஒருநாள் தாமதமாக தொடங்கப்பட்டது. முதல் நாள் ஆட்டம் முழுவதுமாக பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் நாள் தான் ஆட்டமே தொடங்கியது. 

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன், இங்கிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, 258 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, ஸ்மித்தின் பொறுப்பான ஆட்டத்தால் 250 ரன்கள் அடித்தது. 

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, 71 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் ஸ்டோக்ஸும் பட்லரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர். நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 96 ரன்கள் அடித்திருந்தது இங்கிலாந்து அணி. கடைசிநாள் ஆட்டமும், மழையால் தொடங்குவதற்கு தாமதமானது. அதன்பின்னர் தாமதமாக தொடங்கி ஆட்டம் நடைபெற்றது. பட்லர் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அதையடுத்து ஸ்டோக்ஸுடன் பேர்ஸ்டோ ஜோடி சேர்ந்தார். 

தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஸ்டோக்ஸ், சதம் விளாசினார். ஸ்டோக்ஸுடன் இணைந்து பேர்ஸ்டோவும் சிறப்பாக ஆடினார். ஸ்டோக்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 115 ரன்கள் அடித்திருந்தார். இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு 48 ஓவரில் 267 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து அணி. வெற்றி இலக்கை விரட்டும் முனைப்பில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி, வார்னர், பான்கிராஃப்ட், உஸ்மான் கவாஜா ஆகிய மூவரின் விக்கெட்டையும் 47 ரன்களுக்கே இழந்துவிட்டது. முதல் இன்னிங்ஸில் ஸ்மித்திற்கு பின் கழுத்து பகுதியில் அடிபட்டதால் அவர் ஆடவில்லை. அவருக்கு பதிலாக இரண்டாவது இன்னிங்ஸில் லாபஸ்சாக்னே களமிறங்கினார். ஸ்மித்தின் இடத்தை பூர்த்தி செய்யுமளவிற்கு சிறப்பாகவே ஆடினார். 59 ரன்களை குவித்தார் லாபஸ்சாக்னே. 

லாபஸ்சாக்னே விக்கெட்டுக்கு பிறகு டிராவிஸ் ஹெட் பொறுப்பை கையில் எடுத்து சிறப்பாக ஆட, மேத்யூ வேடும் கேப்டன் டிம் பெய்னும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். 47.3 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் அடித்தது. இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது. ஆட்டநாயகனாக பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.