இலங்கையில் பொருளாதார  நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், ஐபிஎல்லில் ஆடிவரும் இலங்கை வீரர்கள் ஐபிஎல்லில் இருந்து விலகி இலங்கை போராட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்று அர்ஜூனா ரணதுங்கா வலியுறுத்தியுள்ளார். 

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால், விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள் பற்றாக்குறை, பெட்ரோல் மற்றும் டீசல் பற்றாக்குறை ஆகியவற்றால் மக்கள் அவதியடைந்துள்ளனர். 

இலங்கை முழுவதும் பலமணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி மக்கள் கடும் துயரம் அடைந்துள்ளனர். சாதாரண தினசரி செயல்பாடுகளே இலங்கை மக்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. 

இதனால் இலங்கை முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவியிலிருந்து விலகக்கோரி மக்கள் போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டுவருகின்றனர். 

இந்நிலையில், ஐபிஎல்லில் கலந்துகொண்டு ஆடிவரும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல்லில் இருந்து விலகி, இலங்கையில் மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று இலங்கைக்கு உலக கோப்பையை வென்று கொடுத்த அர்ஜூனா ரணதுங்கா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து கருத்து கூறியுள்ள அர்ஜூனா ரணதுங்கா, சில இலங்கை வீரர்கள் ஐபிஎல்லில் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். நாட்டை பற்றி கவலைப்படாமல், எதுவும் பேசாமல் ஐபிஎல்லில் ஆடுகிறார்கள். அவர்கள் அரசுக்கு எதிராக பேச பயப்படுகிறார்கள். எந்தெந்த வீரர்கள் ஐபிஎல்லில் ஆடுகிறார்கள் என்று உங்கள்(மக்கள்) அனைவருக்கும் தெரியும் என நினைக்கிறேன். நான் சொல்ல தேவையில்லை. அவர்கள் அனைவரும் உடனடியாக ஐபிஎல்லில் இருந்து ஒரு வாரம் விலகி இலங்கைக்கு வந்து போராட்டங்களில் கலந்துகொண்டு மக்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அர்ஜூனா ரணதுங்கா வலியுறுத்தியுள்ளார்.

பானுகா ராஜபக்சா, மஹீஷ் தீக்‌ஷனா, துஷ்மந்தா சமீரா ஆகிய இலங்கை வீரர்கள் ஐபிஎல் 15வது சீசனில் கலந்துகொண்டு ஆடிவருகிறார்கள்.