ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டி டிராவில் முடிந்தது. லண்டன் லார்ட்ஸில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 258 ரன்களையும் ஆஸ்திரேலிய அணி 250 ரன்களையும் அடித்தன. 

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, பென் ஸ்டோக்ஸின் அபாரமான சதத்தால், 5 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. 48 ஓவரில் 267 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 47.3 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் அடித்தது. இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது. 

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆர்ச்சர் 148 கிமீ வேகத்தில் வீசிய பவுன்ஸரில், ஸ்மித்துக்கு பின் கழுத்தில் அடிபட்டது. அதனால் அவரால் இரண்டாவது இன்னிங்ஸில் ஆடமுடியவில்லை. எனவே இரண்டாவது இன்னிங்ஸில் அவருக்கு பதிலாக லாபஸ்சாக்னே பேட்டிங் ஆடினார். 

முன்பெல்லாம் வீரர்கள் காயம் என்றால் ஃபீல்டிங்கிற்கு மட்டுமே மாற்று வீரர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் அண்மையில் பேட்டிங்கிலும் சப்ஸ்டிடியூட் இறங்கலாம் என விதி கொண்டுவரப்பட்டது. அந்த விதி அமலுக்கு வந்த பிறகு, முதன்முறையாக சப்ஸ்டிடியூட் பேட்ஸ்மேனாக இறங்கியது லாபஸ்சாக்னே தான். 

ஸ்மித்திற்கு அடியை போட்டு அனுப்பிய ஆர்ச்சர், அவருக்கு சப்ஸ்டிடியூட்டாக வந்த லாபஸ்சாக்னேவிற்கும் ஒரு பவுன்ஸரை போட்டார். வார்னரும் கவாஜாவும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, ஆறாவது ஓவரிலேயே களத்திற்கு வந்தார் லாபஸ்சாக்னே. லாபஸ்சாக்னே எதிர்கொண்ட முதல் பந்தே பவுன்ஸர் தான். ஆர்ச்சர் அதிவேகமாக வீசிய அந்த பவுன்ஸர், லாபஸ்சாக்னேவின் ஹெல்மெட்டில் பலமாக அடித்தது. முகப்பகுதிக்கு நேராக அடித்ததால் உடனடியாக ஃபிசியோ வந்து பரிசோதித்தார். ஆனால் எந்த பிரச்னையும் இல்லை என்பதால் லாபஸ்சாக்னே தொடர்ந்து பேட்டிங் செய்தார். அந்த வீடியோ இதோ..