உலக கோப்பை வரலாற்றில் மிகவும் த்ரில்லான இறுதி போட்டியில், இதுவரை இல்லாத அளவிற்கு வித்தியாசமான முறையில் ஐசிசி விதிப்படி இங்கிலாந்து அணி வென்றது. 

உலக கோப்பை இறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இதுவரை கோப்பையை வென்றிராத இரண்டு அணிகள் இறுதி போட்டியில் மோதியதால் முதன்முறையாக இரண்டில் எந்த அணி கோப்பையை தூக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறியது. 

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 241 ரன்கள் அடிக்க, இங்கிலாந்து அணியும் 50 ஓவர் முடிவில் 241 ரன்கள் அடித்தது. இதையடுத்து போட்டி டிரா ஆனதால், சூப்பர் ஓவர் வீசப்பட்டது. சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் தலா 15 ரன்கள் அடித்ததால் சூப்பர் ஓவரும் டிரா ஆனது. இதையடுத்து ஐசிசி விதிப்படி, உலக கோப்பை தொடரில் அதிக பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது.

இங்கிலாந்து அணியின் பல்லாண்டுகால கனவு நனவாக வாய்ப்பு கிடைத்த நிலையில், மிகவும் நெருக்கடியான சூழலில் சூப்பர் ஓவரை வீசும் வாய்ப்பு இளம் ஃபாஸ்ட் பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு வழங்கப்பட்டது. 16 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நீஷம், இரண்டாவது பந்திலேயே சிக்சர் விளாசினார். முதல் பந்தில் வைடுடன் சேர்த்து 3 ரன்கள் கொடுத்த ஆர்ச்சர் இரண்டாவது பந்தில் சிக்ஸர் கொடுத்தார். முதல் இரண்டு பந்துகளிலேயே 9 ரன்கள் எடுக்கப்பட்டதால் ஆர்ச்சர் மீது நெருக்கடி அதிகரித்தது. 

ஆனாலும் அடுத்த 4 பந்துகளில் வெறும் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து சூப்பர் ஓவர் டிராவில் முடிய உதவினார். ஒரு ரன் கூட போயிருந்தால் கூட நியூசிலாந்து கோப்பையை வென்றிருக்கும். இரண்டாவது பந்தில் சிக்ஸர் கொடுத்தாலும் கூட, அந்த நெருக்கடியையும் கடந்து அடுத்த 4 பந்துகளை நன்றாக வீசினார் ஆர்ச்சர். 

போட்டி முடிந்ததும் இதுகுறித்து பேசிய ஆர்ச்சர், தனது கேப்டனும் சக வீரர்களும் கொடுத்த உத்வேகத்தையும் ஆதரவையும் நினைத்து வியந்தார். குறிப்பாக ஸ்டோக்ஸ் சொன்ன அறிவுரைகள் தனக்கு தன்னம்பிக்கையளித்ததாக தெரிவித்தார். இதுகுறித்து பேசிய ஆர்ச்சர், நான் சூப்பர் ஓவரை வீசுவதற்கு முன் என்னிடம் வந்து ஸ்டோக்ஸ் பேசினார். அப்போது, இந்த போட்டியில் வெற்றியோ தோல்வியோ உனது திறமையை பற்றிய சந்தேகத்தை யாருக்கும் வரவழைக்காது. அனைவருக்கும் உன் மீது நம்பிக்கை இருக்கிறது. எனவே நம்பிக்கையுடன் வீசு. ஒருவேளை தோற்றால்கூட அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை இருக்கிறது. அதில் பார்த்துக்கொள்ளலாம். இப்போது விட்டதை அப்போது பிடிக்க மீண்டும் வாய்ப்பு கிடைக்கும். அதனால் வெற்றி தோல்வியை பற்றி கவலைப்படாமல் நன்றாக வீசு என்று ஸ்டோக்ஸ் உத்வேகப்படுத்தியதாக ஆர்ச்சர் கூறினார். 

ஸ்டோக்ஸ் இவ்வாறு கூறியதற்கு அவரது முந்தைய மோசமான அனுபவம் தான் காரணம். 2016 டி20 உலக கோப்பையின் இறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரை வீசிய ஸ்டோக்ஸ், அந்த ஓவரின் முதல் நான்கு பந்துகளிலும் சிக்ஸர் கொடுத்து இங்கிலாந்து தோற்க காரணமாக இருந்தார். ஸ்டோக்ஸ் வீசிய நான்கு பந்துகளையுமே பிராத்வெயிட் சிக்ஸருக்கு விளாசி வெஸ்ட் இண்டீஸை வெற்றி பெற செய்தார். அன்றைக்கு தவறவிட்ட வாய்ப்பை, ஸ்டோக்ஸ் இந்த இறுதி போட்டியில் சிறப்பாக ஆடி ஈடுகட்டிவிட்டார். அதேபோன்றதொரு வாய்ப்பு ஆர்ச்சருக்கும் கிடைக்கும் என்பதை சுட்டிக்காட்டியே அவருக்கு ஆதரவான வார்த்தைகளை கூறி உத்வேகப்படுத்தியுள்ளார். ஸ்டோக்ஸின் வார்த்தைகளால் உத்வேகமும் நம்பிக்கையும் பெற்ற ஆர்ச்சர் நன்றாகவே வீசி இங்கிலாந்துக்கு உலக கோப்பை கிடைக்க காரணமாக இருந்தார்.