இந்திய அணியின் தேர்வாளர்கள் தகுதியில்லாதவர்கள் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக அவர்களை கடுமையாக விமர்சித்திருந்தார் ஃபரோக் எஞ்சினியர். டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு அவர் அளித்திருந்த பேட்டியில், தேர்வாளர்கள் எதனடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்? இப்போது தேர்வாளர்களாக இருப்பவர்கள் வெறும் 10-12 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே ஆடியவர்கள். தேர்வாளர்களில் ஒருவர்.. அவர் பெயர் என்னவென்று தெரியவில்லை. உலக கோப்பையில் ஒரு போட்டியில் இந்திய அணியின் ப்ளேசரை போட்டுக்கொண்டு அனுஷ்கா சர்மாவிற்கு டீ எடுத்துக்கொண்டு சென்று கொடுத்தார். அவரெல்லாம் ஒரு தேர்வாளரா என்று கடுமையாக விமர்சித்திருந்தார். 

இந்த விவகாரத்தில் தனது பெயரை இழுத்துவிட்டதால் செம கடுப்பான அனுஷ்கா சர்மா, இதுவரை பொறுத்துக்கொண்டிருந்த என்னால் இனிமேலும் பொறுக்கமுடியாது என பொங்கியெழுந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், பொதுவாக என்னை பற்றிய வதந்திகளுக்கும் விமர்சனங்களுக்கும் நான் பதில் கூறமாட்டேன். அவற்றையெல்லாம் கேட்டுவிட்டு அமைதியாகத்தான் இருப்பேன். வதந்திகளுக்கு பதில் கூறாமல் அமைதியாக இருந்துதான் அதை எதிர்கொண்டுள்ளேன். இப்படித்தான் 11 ஆண்டுகளாக எனது துறையில் நான் இருந்துவருகிறேன். 

விராட் கோலியை திருமணம் செய்துகொள்வதற்கு முன் காதலித்துக்கொண்டிருந்த சமயத்தில், நான் மேட்ச் பார்க்கப்போய் கோலி சரியாக ஆடவில்லையென்றால், அதற்கு நான் தான் காரணம் என்று என் மீது பழிபோட்டு அவதூறாக பேசினார்கள். நான் அமைதியாக இருந்தேன். அணி நிர்வாகத்தின் மீட்டிங்கில் கலந்துகொண்டு வீரர்கள் தேர்வில் தலையிட்டேன் என்றார்கள். அப்போதும் அமைதி காத்தேன். வெளிநாட்டு தொடர்களின்போது அனுமதிக்கப்பட்ட நேரத்தை எனது கணவருடன் அதிக காலம், அவருடன் இருந்தேன் என்றார்கள். அப்போதும் அமைதியாக இருந்தேன். எல்லா விஷயங்களிலும் பிசிசிஐயின் வழிமுறைகளை சரியாக பின்பற்றியபோதிலும், என் மீதான அவதூறுகளுக்கு நான் அமைதியாகவே இருந்தேன். ஆனால் நமது அமைதியையே பலவீனமாக கருதுகிறார்கள்.

ஆனால் இப்போது கூறப்பட்டிருக்கும் கருத்து, என்னை இதற்கு முன்பை விட கடுமையாக பாதித்திருக்கிறது. அதனால்தான் எனது மௌனத்தை கலைத்துள்ளேன். உங்கள்(ஃபரோக்) கருத்து பரபரப்பாவதற்கு என் பெயரை ஏன் இழுக்கிறீர்கள்? நான் உலக கோப்பையில் ஒரேயொரு போட்டியை மட்டுமே ஸ்டேடியத்திற்கு சென்று நேரில் பார்த்தேன். அதிலும் குடும்ப உறுப்பினர்களுக்கான பாக்ஸில்தான் நான் இருந்தேனே தவிர, தேர்வாளர்கள் அமர்ந்திருக்கும் பாக்ஸில் இல்லை. என் பெயருக்கோ எனது கணவரின் பெயருக்கோ மீண்டும் ஒருமுறை களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாராவது பேச விரும்பினால், ஆதாரத்துடன் பேசுங்கள் என்று அனுஷ்கா சர்மா கொட்டித்தீர்த்துள்ளார்.