அனில் கும்ப்ளே தனது கெரியரில் தான் பந்து வீசியதிலேயே யார் மிகக்கடினமான பேட்ஸ்மேன் என்று தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் ரிஸ்ட் ஸ்பின்னர் அனில் கும்ப்ளே. இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் சுமார் 15 ஆண்டுகள் ஆடிய கும்ப்ளே, 132 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 619 விக்கெட்டுகளையும் 271 ஒருநாள் போட்டிகளில் ஆடி 337 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் முத்தையா முரளிதரன் மற்றும் ஷேன் வார்ன் ஆகிய இருவருக்கு அடுத்து, மூன்றாமிடத்தில் இருக்கிறார் கும்ப்ளே. டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டுவிதமான போட்டிகளிலுமே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் அனில் கும்ப்ளே தான். 

மிகச்சிறந்த வலது கை ரிஸ்ட் ஸ்பின்னரான அனில் கும்ப்ளே, தனது கெரியரில் பிரயன் லாரா, ரிக்கி பாண்டிங், குமார் சங்கக்கரா, ஸ்டீவ் வாக், சயீத் அன்வர், இன்சமாம் உல் ஹக், ஜாக் காலிஸ் உள்ளிட்ட பல சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசி அவர்களை திணறடித்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

சுமார் 10 ஆண்டுகள் இந்திய அணியின் மேட்ச் வின்னராக திகழ்ந்தவர் அனில் கும்ப்ளே. மிகப்பெரிய ஜாம்பவான்கள் பலருக்கு பந்துவீசியுள்ள அனில் கும்ப்ளே, ஜிம்பாப்வே முன்னாள் வீரர் பொம்மியுடனான உரையாடலில், தான் பந்துவீசியதிலேயே மிகக்கடினமான பேட்ஸ்மேன் யார் என்று சொல்லியுள்ளார். 

இதுகுறித்து கேள்விக்கு பதிலளித்த அனில் கும்ப்ளே, பந்துவீச கடினமான பேட்ஸ்மேன்கள் என்று பார்த்தால் நிறைய பேர் இருக்கின்றனர். ஆனால் பிரயன் லாரா தான் பந்துவீச மிகக்கடினமான பேட்ஸ்மேன். ஏனெனில் ஒவ்வொரு பந்துக்கும் 4 விதமான ஷாட்டுகளை வைத்திருப்பார் பிரயன் லாரா. அதனால் அவருக்கு பந்துவீசுவது மிகக்கடினம். அவரை இப்படி வீசி வீழ்த்திவிடலாம் என்று நினைப்போம். ஆனால் அடுத்த முறை அந்த ஷாட்டை மாற்றிவிடுவார்; வேறு ஷாட் ஆடுவார். அதனால் அவருக்கு பந்துவீசுவதுதான் கடினம் என்று கும்ப்ளே தெரிவித்துள்ளார். 

பிரயன் லாராவிற்கு எதிராக 14 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அனில் கும்ப்ளே, 5 முறை மட்டுமே லாராவை வீழ்த்தியுள்ளார். 2002ம் ஆண்டு ஆண்டிகுவாவில், உடைந்த தாடையுடன் பந்துவீசி லாராவை வீழ்த்தினார் கும்ப்ளே. 

பிரயன் லாரா ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேன்களில் முக்கியமானவர். சச்சின் டெண்டுல்கருக்கு நிகரான சிறந்த பேட்ஸ்மேன் பிரயன் லாரா. இருவரில் ஒருவரை மேம்பட்டவர் என்று சொல்லமுடியாது. அந்தளவிற்கு இருவரும் மிகச்சிறந்தவர்கள் என்பது நிதர்சனம்.