இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை இறுதி போட்டியின் முடிவு தீர்மானிக்கப்பட்ட விதம் அனைவரையும் அதிருப்தியடைய செய்தது. 

உலக கோப்பை இறுதி போட்டி டிரா ஆனது. இதையடுத்து போட்டியின் முடிவை தீர்மானிப்பதற்காக சூப்பர் ஓவர் வீசப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக சூப்பர் ஓவரும் டிரா ஆனதால், அந்த போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்பதன் அடிப்படையில், ஐசிசி விதிப்படி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு கோப்பை இங்கிலாந்துக்கு வழங்கப்பட்டது. 

ஐசிசி விதிப்படி இங்கிலாந்து வென்றிருந்தாலும், தார்மீக ரீதியில் அந்த போட்டியில் எந்த அணியும் தோற்கவில்லை என்பதுதான் உண்மை. அந்தளவிற்கு இரு அணிகளுமே நன்றாக ஆடின. கடைசி வரை கடுமையாக போராடின. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நியூசிலாந்து அணிக்கு எதிராக முடிவு அமைந்துவிட்டது. 

முன்னாள் ஜாம்பவான்கள் பலருமே, பவுண்டரி எண்ணிக்கையின் அடிப்படையில் இறுதி போட்டியின் முடிவு தீர்மானிக்கப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்தனர். இன்னொரு சூப்பர் ஓவர் கூட வீசவைத்திருக்கலாம் என்று சச்சின் டெண்டுல்கர் கூட கருத்து தெரிவித்திருந்தார். 

இதுகுறித்த அதிருப்தியை அனைவருமே வெளிப்படுத்தியிருந்த நிலையில், அந்த விதியை மாற்றியமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில், பவுண்டரி ரூல்ஸ் இறுதி போட்டியில் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும், அந்த விதியை மாற்றியமைப்பது குறித்தும் அனில் கும்ப்ளே தலைமையிலான ஐசிசி கிரிக்கெட் கமிட்டி அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் விவாதிக்க உள்ளதாக ஐசிசி அதிகாரி தெரிவித்துள்ளார்.