இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சுயநலமற்ற வீரருமான ராகுல் டிராவிட், இந்திய அணியை பல இக்கட்டான சூழல்களில் இருந்து காப்பாற்றி அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்தவர். 

தனது நிலையான பேட்டிங்கின் காரணமாக இந்திய அணியின் பெருஞ்சுவர் என அழைக்கப்படுபவர். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் இந்திய கிரிக்கெட்டுக்காக உழைத்து வருபவர். அண்டர் 19 மற்றும் இந்தியா ஏ அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து, பல இளம் திறமைகளை இந்திய அணிக்கு உருவாக்கி கொடுத்துவருகிறார்.

தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநராகவும் இருந்துவருகிறார். இந்நிலையில், மத்திய பிரதேச கிரிக்கெட் வாரிய உறுப்பினர் சஞ்சய் குப்தாவின் புகாரை ஏற்று, பிசிசிஐ ஒழுங்குநெறி அதிகாரி ஜெயின், டிராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநராக இருக்கும் ராகுல் டிராவிட், ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியின் உரிமையாளராக இருக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்திலும் அங்கம் வகிக்கிறார். எனவே டிராவிட், இரட்டை ஆதாயம் தரும் பதவிகளில் இருப்பதால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சஞ்சய் குப்தா பிசிசிஐ-யிடம் புகார் அளித்தார். 

அதை ஏற்றுக்கொண்டு, டிராவிட் இதுகுறித்து 2 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு பிசிசிஐ ஒழுங்குநெறி அதிகாரி டி.கே.ஜெயின், டிராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

ராகுல் டிராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் கடும் அதிருப்தியடைந்த கங்குலி, தனது அதிருப்தியை உடனடியாக மிகவும் காட்டமாக வெளிப்படுத்தினார். இதுகுறித்து டுவீட் செய்த கங்குலி, இந்திய கிரிக்கெட்டில் புது ஃபேஷன் ஒன்று நிலவுகிறது. டிவி செய்திகளில் வருவதற்கும் பிரபலமடைவதற்கும் இரட்டை பதவி விவகாரத்தை சிலர் கையில் எடுக்கிறார்கள். டிராவிட்டுக்கு இரட்டை பதவி விவகாரம் குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட்டை அந்த கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கங்குலி தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

டிராவிட்டுக்கு ஆதரவாக கங்குலியுடன் இணைந்து ஹர்பஜன் சிங்கும் குரல் கொடுத்தார். இதுகுறித்து ஹர்பஜன் சிங் பதிவிட்ட டுவீட்டில், இந்திய கிரிக்கெட் எங்கே செல்கிறது என்று தெரியவில்லை. ராகுல் டிராவிட்டை சிறந்த மனிதனை இந்திய கிரிக்கெட்டால் பெற முடியாது. அவரை போன்ற லெஜண்ட் வீரர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது அவர்களை அசிங்கப்படுத்துவது ஆகும். இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு ராகுல் டிராவிட் போன்ற தலைசிறந்தவர்களின் பங்களிப்பு அவசியம். ஆம் கங்குலி சொன்னதை போலவே, கடவுள்தான் இந்திய கிரிக்கெட்டை காப்பாற்ற வேண்டும் என்று ஹர்பஜன் சிங் தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார். 

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் தலைமை பயிற்சியாளருமான அனில் கும்ப்ளேவும் ராகுல் டிராவிட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அனில் கும்ப்ளே, எல்லா தொழில்களிலுமே ஏதாவது ஒரு முரண்பாடு இருக்கத்தான் செய்யும். இந்திய கிரிக்கெட்டுக்காக ஓய்வு பெற்ற பிறகும் பங்களிப்பு செய்துவரும் கொஞ்சநஞ்ச வீரர்களையும் இதுபோன்று இரட்டை பதவி என்று பாடாய் படுத்தக்கூடாது. அந்த கொஞ்ச வீரர்களும் இந்திய கிரிக்கெட்டுக்கு பங்களிப்பு செய்யக்கூடாது என்று விரும்பினால், கிரிக்கெட்டுக்கு சம்மந்தம் இல்லாதவர்களைத்தான் பொறுப்புகளில் நியமிக்க வேண்டும் என்று காட்டமாக கும்ப்ளே தெரிவித்துள்ளார்.