சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகிய நால்வரும் திகழ்கின்றனர். இவர்களில் ஜோ ரூட்டை தவிர மற்ற மூவரும் அனைத்து விதமான போட்டிகளிலும் அபாரமாக ஆடிவருகிறார்கள். ஜோ ரூட் டி20 போட்டிகளில் மட்டும் ஆடுவதில்லை. 

டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி, வில்லியம்சன், ஸ்மித், ரூட் ஆகிய நால்வருமே அபாரமாக ஆடிவருகின்றனர். ஒருநாள் கிரிக்கெட்டிலும் இவர்கள் நால்வரும் அபாரமாக ஆடி, அவரவர் அணிக்கு வெற்றிகளை தேடிக்கொடுக்கின்றனர். டி20 போட்டிகளில் ரூட் மட்டும் ஆடுவதில்லை. கோலி, வில்லியம்சன், ஸ்மித் ஆகிய மூவரும் அதிலும் முத்திரை பதித்துள்ளனர். 

இவர்கள் நால்வரில், டாப் 2 இடங்களில் கோலியும் ஸ்மித்தும் தான் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் இடையேயான ஒப்பீடு தான் அதிகமாக செய்யப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் மூன்று விதமான போட்டிகளிலும் முத்திரை பதித்த இந்த வீரர்களில் யார் சிறந்தவர் என்று ஒருவரை மட்டும் குறிப்பிடுவது மிகவும் கடினமான விஷயம். 

ஆனால் நம்பரின் அடிப்படையிலும் சாதனைகளின் அடிப்படையிலும் பார்க்கும்போது கோலி மற்றவர்களை பின்னுக்குத் தள்ளிவிடுவார். அதிக சதங்கள், அதிக ரன்கள் ஆகிய சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை கோலி முறியடித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

போட்டிக்கு போட்டி புதிய மைல்கற்களை எட்டும் கோலி, சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். பேட்டிங் திறமையில் நால்வரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல என்றாலும், நம்பரின் அடிப்படையில் கோலி முன் நிற்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலியை விட ஸ்மித்தின் நம்பர் சிறப்பாக உள்ளது. எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்மித்தின் கை ஓங்கியிருக்கிறது. 

இந்நிலையில், கோலி - ஸ்மித் - வில்லியம்சன் - ரூட் ஆகிய நால்வரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற பொதுவான கேள்வி இலங்கை அணியின் சீனியர் ஆல்ரவுண்டர் ஆஞ்சலோ மேத்யூஸிடமும் முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மேத்யூஸ், விராட் கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன். சங்கக்கராவிற்கு அடுத்து, அனைத்துவிதமான போட்டிகளிலும் சீராக ஆடி ரன்களை குவிக்கும் ஒரே வீரர் விராட் கோலி தான் என்றார் மேத்யூஸ்.