ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் தங்களது 9வது போட்டியை ஆடிய ஆர்சிபி அணி, கேகேஆர் அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. 

இந்த சீசனின் முதல் 6 போட்டிகளிலும் தோற்ற ஆர்சிபி, 7வது போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தது. பின்னர் மீண்டும் 8வது போட்டியில் தோற்றது. 9வது போட்டியில் கேகேஆர் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் கேப்டன் கோலி அதிரடி சதம் மற்றும் மொயின் அலியின் அதிரடியான அரைசதம் ஆகியவற்றால் 20 ஓவர் முடிவில் ஆர்சிபி அணி 213 ரன்களை குவித்தது. 

214 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர்கள் லின் - நரைன் ஏமாற்றியதை அடுத்து கில் மற்றும் உத்தப்பாவும் சரியாக ஆடவில்லை. ஆனால் ரசலும் ராணாவும் இணைந்து கடைசி வரை போராடினர். கடைசி 6 ஓவர்களில் கேகேஆர் அணியின் வெற்றிக்கு 113 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ராணாவும் ரசலும் இணைந்து 102 ரன்களை குவித்தனர். இதையடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. 

ரசல் 25 பந்துகளில் 9 சிக்ஸர்கள் உட்பட 65 ரன்களை குவித்தார். தொடக்க மற்றும் மிடில் ஓவர்களில் கேகேஆர் பேட்ஸ்மேன்கள் பந்துகளை வீணாக்காமல் கொஞ்சம் நன்றாக ஆடியிருந்தால் கேகேஆர் அணி வென்றிருக்கும். ஆண்ட்ரே ரசல் அதிரடியை தொடங்கிவிட்டால் அவரை கட்டுப்படுத்துவது கஷ்டம். 

எனினும் இந்த சீசனில் அபாரமாக பந்துவீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உலக கோப்பையில் ஸ்டாண்ட்பை வீரராக தேர்வாகியிருக்கும், நவ்தீப் சைனி ரசலையே திணறடித்தார். ஆண்ட்ரே ரசல் அதிரடியாக ஆட முயற்சி செய்தும் சைனி வீசிய 14வது ஓவரில் பெரிய ஷாட் ஆடமுடியாமல் திணறினார். பின்னர் சைனி வீசிய 16வது ஓவரில் ராணா அபாரமாக ஆடி முதல் 5 பந்துகளில் 17 ரன்களை குவித்தார். சைனியின் கடைசி பந்தை எதிர்கொண்ட ரசல், அடிக்க முயன்றார். ஆனால் அபாரமான வேகத்துடன் நல்ல லெந்த்தில் வீசப்பட்ட அந்த பவுன்ஸரை தொடக்கூட முடியாமல், பயந்துபோய் பேட்டை உள்பக்கமாக இழுத்துக்கொண்டார் ரசல். 

தொடக்கம் முதலே அபாரமான லைன் அண்ட் லெந்த்தால் கேகேஆர் பேட்ஸ்மேன்களை தெறிக்கவிட்ட சைனி, ரசலையே மிரட்டிவிட்டார். ரசல் நல்ல ஃபார்மில் ஆடிக்கொண்டிருக்கும்போது, அவரை மிரட்டுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. நவ்தீப் சைனிக்கு இந்த உலக கோப்பையில் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், இந்திய அணியின் எதிர்கால நட்சத்திர ஃபாஸ்ட் பவுலராக ஜொலிப்பார் என்பதில் ஐயமில்லை.