சமீபகாலமாக பேட்ஸ்மேன்களின் தலைக்கு நேராக பவுன்ஸர்கள் வீசுவது வழக்கமாகிவிட்டது. அதனால் பல பேட்ஸ்மேன்கள் படுமோசமாக அடிவாங்குகின்றனர். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா அப்படித்தான் அபாயகரமான பவுன்ஸர்களை வீசி பேட்ஸ்மேன்களின் மண்டையை பதம்பார்த்தார். அதேபோல உலக கோப்பையில் இதுபோன்ற சம்பவங்கள் ஏராளமாக நடந்தன.  குறிப்பாக ஆர்ச்சரின் பவுன்ஸர்கள் அனல் தெறித்தன. 

நடந்துவரும் ஆஷஸ் தொடரில் கூட, ஆர்ச்சர் பல அபாயகரமான பவுன்ஸர்களை வீசினார். அதில் ஒரு பவுன்ஸரில் ஸ்மித் காயமடைந்து ஒரு போட்டியிலேயே ஆடமுடியாமல் போனது. 

இந்நிலையில், கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் அதிரடி வீரர் ஆண்ட்ரே ரசலுக்கு தலையில் பலத்த அடி விழுந்தது. ஜமைக்கா தல்லாவாஸ்க்கும் செயிண்ட் லூசியா அணிக்கும் இடையே நடந்த போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய ஜமைக்கா அணி 170 ரன்கள் அடித்தது. 171 ரன்கள் என்ற இலக்கை ரஹ்கீம் கார்ன்வாலின் அதிரடியான பேட்டிங்கால் 17வது ஓவரிலேயே எடுத்து அபார வெற்றி பெற்றது செயிண்ட் லூசியா அணி. 

இந்த போட்டியில் ஜமைக்கா அணியின் பேட்டிங்கின்போது அந்த அணியின் அதிரடி வீரரான ரசல், 14வது ஓவரில் பேட்டிங் ஆடினார். முதல் இரண்டு பந்துகளில் ரன்னே எடுக்காத ரசல், ரன் எடுக்கும் தீவிரத்தில் இருந்த நேரத்தில், அடுத்த பந்தை தலைக்கு நேராக பவுன்ஸராக வீசினார் வில்ஜோயன். அந்த பவுன்ஸரை புல் ஷாட் ஆட நினைத்த ரசல், அடிக்காமல் விட்டார். இதையடுத்து அந்த பந்து அவரது ஹெல்மெட்டில் பலமாக அடித்தது. இந்த அடியால் அப்படியே சுருண்டு விழுந்தார் ரசல். உடனடியாக ஃபிசியோ வந்து பரிசோதித்தனர். அவரால் நடந்து செல்ல முடியாததால் ஸ்ட்ரெச்சரில் வைத்து தூக்கி செல்லப்பட்டார். கம்பீரமாக இருக்கும் ரசலை ஸ்ட்ரெச்சரில் தூக்கிச்சென்ற சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியது. அந்த வீடியோ இதோ..