IPL 2023: சிஎஸ்கே அணியின் பலங்கள் & பலவீனங்கள்..! ஓர் அலசல்
ஐபிஎல் 16வது சீசனில் களமிறங்கும் சிஎஸ்கே அணியின் பலங்கள் மற்றும் பலவீனங்கள் என்னென்ன என்று அலசுவோம்.
ஐபிஎல்லில் 15 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 4 முறை கோப்பையை வென்று ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக திகழும் சிஎஸ்கே அணி, 5வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்த சீசனில் களமிறங்குகிறது. அதற்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த ஒரு மாதமாக தீவிரமாக தயாராகிவருகிறது.
சிஎஸ்கே அணி ஐபிஎல்லில் வெற்றிகரமான அணியாக திகழ்ந்ததற்கு காரணமே, அனுபவம் வாய்ந்த சீனியர் வீரர்களை கொண்ட வலுவான கோர் அணியை கட்டமைத்து வைத்திருந்ததுதான். ரெய்னா, பிராவோ ஆகிய வீரர்கள் ஐபிஎல்லில் இருந்து விலகிய பின்னர் சிஎஸ்கே அணியின் பலம் குறைந்தது.
அதனால் எந்தெந்த இடங்களில் பிரச்னை இருக்கிறதோ, அவற்றையெல்லாம் கலைந்து வலுவான அணியை கட்டமைக்கும் விதமாக இங்கிலாந்தின் சீனியர் ஆல்ரவுண்டரும் மிகப்பெரிய மேட்ச் வின்னருமான பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடி என்ற பெரிய தொகையை கொடுத்து ஏலத்தில் வாங்கியது சிஎஸ்கே அணி. மேலும் நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர் கைல் ஜாமிசன் (ரூ.1 கோடி), அஜிங்க்யா ரஹானே (ரூ.50 லட்சம்), நிஷாந்த் சிந்து (ரூ.60 லட்சம்), ஆல்ரவுண்டர்கள் பகத் வர்மா (ரூ.20 லட்சம்) மற்றும் அஜய் மண்டால் (ரூ.20 லட்சம்) ஆகியோரை ஏலத்தில் எடுத்தது.
IPL 2023: பென் ஸ்டோக்ஸ் பேட்ஸ்மேனாக மட்டுமே ஆடுவார்..! சிஎஸ்கே அணிக்கு பெரிய பின்னடைவு
தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியின் பலங்கள் மற்றும் பலவீனங்களை அலசுவோம்.
பலங்கள்:
1. தோனியின் கேப்டன்சி
தோனியின் கேப்டன்சி தான் மிகப்பெரிய பலமே. கடந்த சீசனில் ஜடேஜாவை கேப்டனாக நியமித்து பார்த்தது சிஎஸ்கே அணி. ஆனால் அவரது கேப்டன்சியில் தொடர் தோல்விகளை தழுவியதால், மீண்டும் தோனியே கேப்டனாக நியமிக்கப்பட்டார். டி20 கிரிக்கெட்டின் அனைத்து நுணுக்கங்களையும், வீரர்களை பயன்படுத்தும் விதம் மற்றும் கோப்பையை வெல்லும் வித்தையை அறிந்தவர் தோனி. எனவே அவரது கேப்டன்சி சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பலம். அவருக்கு அடுத்து கேப்டனை தேர்வு செய்வதும், புதிய கேப்டனின் கீழ் சிஎஸ்கே அணி எப்படி ஆடப்போகிறது என்பதுமே எதிர்காலத்தில் பிரச்னையாக இருக்கும். இந்த சீசனில் அந்த பிரச்னை இல்லை.
2. நிறைய ஆல்ரவுண்டர்கள்:
கேப்டன் தோனியும் சரி, சிஎஸ்கே அணியும் சரி, ஆல்ரவுண்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதனால் சிஎஸ்கே அணியில் எப்போதுமே ஆல்ரவுண்டர்கள் நிறைந்திருப்பார்கள். இந்த சீசனிலும் ஜடேஜா, பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, பிரிட்டோரியஸ், மிட்செல் சாண்ட்னெர், ஷிவம் துபே ஆகிய ஆல்ரவுண்டர்கள் உள்ளனர். இவர்களில் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக இந்த சீசனில் பந்துவீசமாட்டார். ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே ஆடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருப்பது சிறிய ஏமாற்றம்தான் என்றாலும், அவர் இல்லாமலேயே நல்ல பவுலிங் டெப்த் சிஎஸ்கே அணியில் உள்ளது.
IPL 2023: புதிய கேப்டனின் கீழ் களமிறங்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வலுவான ஆடும் லெவன்
3. தரமான ஸ்பின்னர்கள்:
இந்த சீசனில் ஐபிஎல் போட்டிகளில் ஹோம் கண்டிஷனில் நடக்கவுள்ளதால் ஸ்பின் பவுலிங் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஸ்பின்னிற்கு சாதகமான சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தில் வெற்றி பெற தரமான ஸ்பின்னர்கள் தேவை. அந்தவகையில் சிஎஸ்கேவிடம் தரமான சீனியர் ஸ்பின்னர்கள் நிறைந்துள்ளனர். ஜடேஜா, மொயின் அலி, மிட்செல் சாண்ட்னெர் ஆகிய மூவரும் சீனியர் ஸ்பின் ஆல்ரவுண்டர்கள். இவர்களில் மிட்செல் சாண்ட்னெர் ஆடும் லெவனில் இடம்பெற வாய்ப்பு குறைவு. சிஎஸ்கே அணியின் முதன்மை ஸ்பின்னர் இலங்கையின் மஹீஷ் தீக்ஷனா. கடந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக அபாரமாக பந்துவீசி அசத்தினார். எனவே தரமான ஸ்பின்னர்களை பெற்றிருப்பது சிஎஸ்கே அணியின் பெரிய பலம்.
பலவீனங்கள்:
1. பென் ஸ்டோக்ஸ் பந்துவீசாதது:
பென் ஸ்டோக்ஸ் ஒரு ஆல்ரவுண்டர்; பவுலிங்கும் வீசுவார் என்பதால் அணியின் பேலன்ஸ் வலுப்படும் என்பதற்காகவே அவருக்கு ரூ.16.25 கோடி என்ற பெரிய தொகையை கொடுத்து சிஎஸ்கே அணி அவரை வாங்கியது. ஆனால் அவர் முழங்கால் காயம் காரணமாக பந்துவீசமாட்டார்; ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே இந்த சீசனில் ஆடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதால் அவர் பந்துவீசாததால் ஒரு பவுலிங் ஆப்சன் குறையும். அவர் ஆடுவதால் பிரிட்டோரியஸ் - கைல் ஜாமிசன் ஆகிய இருவரையுமே அணியில் எடுக்க முடியாது. அப்படியிருக்கையில் அவரும் பந்துவீசாதது பெரிய பின்னடைவாக அமையும். டெவான் கான்வே, பென் ஸ்டோக்ஸ்,மொயின் அலி, தீக்ஷனா ஆகிய நால்வரும் தான் வெளிநாட்டு வீரர்களாக ஆடுவார்கள். எனவே பிரிட்டோரியஸுக்கு இடமில்லை. அப்படியிருக்கையில் ஸ்டோக்ஸும் பந்துவீசாதது பின்னடைவு.
2. மிடில் ஆர்டர் பேட்டிங்:
ரெய்னாவின் இடத்தை முறையாக நிரப்ப இன்றளவும் சிஎஸ்கே அணியில் எந்த வீரரும் இல்லை. ராயுடு, உத்தப்பா என பல வீரர்களை முயற்சி செய்தது சிஎஸ்கே அணி. ஆனால் அவர்கள் தொடர்ச்சியாக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்த சீசனிலும் ரஹானேவை எடுத்துள்ளது சிஎஸ்கே அணி. ஆனால் அவர் ஒருமுனையில் நின்று சப்போர்ட் செய்வாரே தவிர, அடித்து ஆடக்கூடிய வீரர் கிடையாது. ஸ்டோக்ஸும் மிக அதிரடியாக அடித்து ஆடும் வீரர் கிடையாது. மொயின் அலி அடித்து ஆடினால் தான் உண்டு. பின்வரிசையில் ஜடேஜா பார்த்துக்கொள்வார். தோனியாலும் அவரது இளமைக்காலத்தை போல அடித்து ஆட முடியவில்லை. எனவே மிடில் ஆர்டர் பலவீனமாக அமையலாம்.
டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வீரராக ஷதாப் கான் வரலாற்று சாதனை
3. முகேஷ் சௌத்ரி விலகல்:
ஃபாஸ்ட் பவுலர் முகேஷ் சௌத்ரி விலகியதும் பின்னடைவு. பென் ஸ்டோக்ஸாலும் பந்துவீசமுடியாத சூழலில், முகேஷ் சௌத்ரியும் ஆடாதது பெரிய பின்னடைவு. இப்போதைக்கு தீபக் சாஹர் மட்டுமே ஆடும் லெவனில் இடம்பெறக்கூடிய தரமான ஃபாஸ்ட் பவுலராக இருக்கிறார். டெவான் கான்வேவை ஆடவைக்கவில்லை என்றால் பிரிட்டோரியஸ் அல்லது கைல் ஜாமிசன் ஆகிய இருவரில் ஒருவரை ஆடவைக்கலாம்.