இந்திய கிரிக்கெட் வீரர் அம்பாதி ராயுடு, உலக கோப்பை அணியில் புறக்கணிக்கப்பட்ட விரக்தியில் திடீரென ஓய்வு அறிவித்தார். இந்நிலையில், தற்போது தனது முடிவை திரும்பப்பெறும் முடிவில் இருக்கிறார். 

உலக கோப்பை தொடங்குவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யுவராஜ் சிங் ஓரங்கட்டப்பட்டதிலிருந்தே, நான்காம் வரிசை சிக்கல் இந்திய அணியில் இருந்துவந்தது. நான்காம் வரிசை சிக்கலுக்கு தீர்வு காணும் விதமாக ரஹானே, மனீஷ் பாண்டே, ரெய்னா, ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட பல வீரர்கள் அந்த வரிசையில் இறக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டனர். 

ஒருவழியாக ராயுடு அந்த இடத்திற்கு உறுதி செய்யப்பட்டார். கடந்த ஆண்டு நடந்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடருக்கு பின், ராயுடுதான் இந்திய அணியின் நான்காம் வரிசை என கேப்டன் கோலி உறுதி செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் ராயுடு கழட்டிவிடப்பட்டு உலக கோப்பை அணியில், ஆல்ரவுண்டர் என்பதால் விஜய் சங்கர் எடுக்கப்பட்டார். 

அப்போதே ராயுடு அதிருப்தியடைந்தார். ஆனால் மாற்று வீரர்கள் பட்டியலில் ராயுடு இருந்தார். தவான், விஜய் சங்கர் ஆகிய இருவரும் காயத்தால் வெளியேறிய போதும் கூட, ராயுடு புறக்கணிக்கப்பட்டார். அதனால் அதிருப்தி விரக்தியாக மாறியது. உலக கோப்பை அணியில் புறக்கணிக்கப்பட்ட ஏமாற்றத்தால் விரக்தியடைந்த ராயுடு, கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். 

இந்நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் பி.வி.பார்த்தசாரதி ஒருநாள் தொடரில் ஆடவந்த ராயுடு, தனது ஓய்வு முடிவு குறித்து பேசினார். அப்போது, உலகக் கோப்பை தொடருக்காக கடந்த 5 ஆண்டுகளாக கடுமையாகப் பயிற்சி செய்தேன். ஆனால் உலக கோப்பை அணியில் இடம்கிடைக்கவில்லை. உலக கோப்பை அணியில் இடம்பெறாததும், இந்திய அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதும் எனக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது. நாம் கடுமையாக உழைத்து அது கிடைக்கவில்லை என்றால், அதிலிருந்து விலகுவது தான் சிறந்த முடிவாக இருக்கும். எனவே, நானும் நல்ல மனநிலையில் தான் ஓய்வு முடிவை அறிவித்தேன். எனவே அது கண்டிப்பாக அவசரத்தில் எடுத்த முடிவு கிடையாது. நன்கு யோசித்துத்தான் அந்த முடிவை எடுத்தேன். 

ஆனால் ஓய்வு அறிவித்துவிட்டு அதுகுறித்து சில காலம் யோசித்தேன். தற்போது மீண்டும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். எனக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் எப்போதும் உறுதுணையாக இருந்துள்ளது. எனவே அடுத்து வரவுள்ள ஐபிஎல் தொடரில் மீண்டும் சிஎஸ்கே அணிக்காக விளையாட உள்ளேன் என்று ராயுடு தெரிவித்தார். 

மேலும், நான் கிரிக்கெட் விளையாடி சில காலம் ஆனதால், எனது உடல்திறன் மற்றும் ஆட்டத்திறன் சரியாக இல்லை. எனவே மீண்டும் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளேன். தற்போதைக்கு இதில் தான் எனது முழு கவனமும் உள்ளது. விரைவில் முழுநேர கிரிக்கெட் வீரராக மீண்டும் உருவெடுப்பேன். ஏனென்றால் கிரிக்கெட்டை நான் மிகவும் நேசிக்கிறேன் என்று தெரிவித்தார்.