உலக கோப்பை அணியில் இடம்பெறாத விரக்தியில் ஓய்வு அறிவித்த அம்பாதி ராயுடு, தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுள்ளார். 

உலக கோப்பைக்கான நான்காம் வரிசை பரிசோதனையில் நான்காம் வரிசை பேட்ஸ்மேனாக கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டு கடைசி நேரத்தில் கழட்டிவிடப்பட்டவர் ராயுடு. கடைசி நேரத்தில் விஜய் சங்கர் அணியில் எடுக்கப்பட்டார். 

உலக கோப்பை அணிக்கான மாற்று வீரர்கள் பட்டியலில் ராயுடு பெயர் இடம்பெற்றிருந்த நிலையில், தவான் மற்றும் விஜய் சங்கர் ஆகிய இருவரும் காயத்தால் வெளியேறிய போதும்கூட, ராயுடு சேர்க்கப்படவில்லை. அதனால் அதிருப்தியடைந்த ராயுடு, கடந்த ஜூலை 3ம் தேதி திடீரென கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். 

இந்நிலையில், அவசரத்தில் உணர்ச்சிவசப்பட்டு ஓய்வு முடிவை எடுத்துவிட்டதாகவும், மீண்டும் கிரிக்கெட் ஆட விரும்புவதால் ஓய்வு முடிவை திரும்பப்பெறுவதாகவும் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்துக்கு கடிதம் எழுதினார். அவரது முடிவை ஏற்றுக்கொண்ட ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம், 2019-20ம் ஆண்டில் நடக்கும் உள்நாட்டு போட்டிகளில் ஹைதராபாத் அணியில் ராயுடு ஆடுவார் என்று தெரிவித்துள்ளது. 

தனது ஓய்வு முடிவை திரும்பப்பெறுவது குறித்து ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்துக்கு ராயுடு எழுதியுள்ள கடிதத்தில், என்னுடைய கடினமான நேரத்தில் எனக்கு துணையாக இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் வீரர்கள் விவிஎஸ் லட்சுமணன் மற்றும் நோயல் டேவிட் ஆகியோர் எனக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, என்னை ஊக்கப்படுத்தவும் செய்தனர். மேலும் இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது என்பதை எனக்கு புரியவைத்தார்கள் என்று ராயுடு தெரிவித்துள்ளார்.