இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பாதி ராயுடு அதிரடியாக ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். 

கடந்த 2013ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான அம்பாதி ராயுடு, தொடர்ச்சியாக அணியில் இடம்பெற்றதில்லை. அவ்வப்போது எடுக்கப்படுவதும் நீக்கப்படுவதுமாக இருந்தார். அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்துவந்த ராயுடுவுக்கு அருமையான ஒரு வாய்ப்பு கிடைத்தது. 

உலக கோப்பையை மனதில்வைத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியின் நான்காம் வரிசை பேட்ஸ்மேனுக்கான தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ரஹானே, ரெய்னா, ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே என பலரை பரிசோதித்து டயர்டான இந்திய அணிக்கு ராயுடுவின் மூலம் தீர்வு காணப்பட்டதாக கருதப்பட்டது. 

ராயுடுவுக்கும் கடந்த ஆண்டின் பிற்பாதியிலிருந்து தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டன. உலக கோப்பைக்கு ராயுடுதான் நான்காம் வரிசை வீரர் என்று கடந்த ஆண்டு நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பின்னர் கேப்டன் கோலி உறுதியும் அளித்தார். 

ஆனால் உலக கோப்பைக்கு முன்பாக நடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் சிறப்பாக ஆடிய விஜய் சங்கர் கடைசி நேரத்தில் ராயுடுவின் இடத்தை பிடித்தார். உலக கோப்பை அணியில் விஜய் சங்கர் இடம்பிடித்தார். இதனால் ராயுடு கடும் அதிருப்தியடைந்தார். 

இந்நிலையில், அனைத்துவிதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக பிசிசிஐக்கு கடிதம் எழுதியுள்ளார் ராயுடு. 33 வயதான ராயுடு, 55 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1694 ரன்கள் அடித்துள்ளார். 6 டி20 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள ராயுடு, ஒரு டெஸ்ட் போட்டியில் கூட ஆடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.