வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 177 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிவரும் இந்திய அணியின் மிகப்பெரிய வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரையும் வீழ்த்தி மிரட்டினார் அல்ஸாரி ஜோசஃப்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் ஒருநாள் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 176 ரன்களுக்கு சுருண்டது.
முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 79 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், ஜேசன் ஹோல்டரும் ஃபேபியன் ஆலனும் இணைந்து சிறப்பாக ஆடி 8வது விக்கெட்டுக்கு 78 ரன்களை சேர்த்தனர். அதன்விளைவாக அந்த அணி 176 ரன்கள் அடித்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
177 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்ட தொடங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். தொடக்கம் முதலே அடித்து ஆடிய ரோஹித் சர்மா, அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 51 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 60 ரன்கள் அடித்து அல்ஸாரி ஜோசஃபின் பந்தில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ரோஹித்தின் அதிரடியால் ரோஹித் - இஷான் கிஷன் ஜோடி 84 ரன்களை குவித்தது.
இன்னிங்ஸின் 14வது ஓவரை வீசிய அல்ஸாரி ஜோசஃப், அந்த ஓவரின் முதல் பந்தில் ரோஹித் சர்மாவையும், 5வது பந்தில் கோலியையும் வீழ்த்தி மிரட்டினார். ரோஹித் சர்மா ஆட்டமிழந்ததும் களத்திற்கு வந்த விராட் கோலி, முதல் 2 பந்துகளில் 2 பவுண்டரி அடித்து, அவர் எதிர்கொண்ட 3வது பந்தில் ரன் அடிக்கவில்லை; 4வது பந்தில் கோலி ஆட்டமிழந்தார்.
ஒரே ஓவரில் அல்ஸாரி ஜோசஃப், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருபெரும் வீரர்களை வீழ்த்தினார் அல்ஸாரி ஜோசஃப். ஆனாலும் இலக்கு எளிதானது என்பதால் இந்திய அணி வெற்றியை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இஷான் கிஷனும் ரிஷப் பண்ட்டும் இணைந்து ஆடிவருகின்றனர்.
